Last Updated : 03 Sep, 2016 08:14 AM

 

Published : 03 Sep 2016 08:14 AM
Last Updated : 03 Sep 2016 08:14 AM

நாடு முழுவதும் எம்பி-க்களின் தொகுதி நிதியை விடுவிப்பதில் தாமதம்: பல ஆயிரம் கோடி வளர்ச்சிப் பணிகள் தேக்கம்

நாடு முழுவதும் பெரும்பாலான எம்பிக்களின் தொகுதி நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத் தால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் மொத்தம் 790 எம்பிக்கள் உள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.5 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.3,950 கோடி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட (MPLADS) நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இதைச் செயல்படுத்துகிறது.

அதன்படி, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலா ளர் து.ராஜா (வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர்), தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி யில் 4 புதிய வகுப்பறைகள் கட்டு வதற்காக, ரூ.50 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்தார்.

2015-16-ம் நிதி ஆண்டுக்கான (2015 ஏப்ரல் 1 முதல் 2016 மார்ச் 31 முடிய) இந்தப் பணிக்காக, கடந்த 2015 நவம்பரில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின. ஒப்பந்தப்படி 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், 90 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில், 9 மாதமாகியும், ஒரு தவணைகூட பணம் வராததால், இறுதிக்கட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறியபோது, “தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டால், வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நிதி வரவில்லை என்றனர். வேலூரில் கேட்டால், டெல்லியில் இருந்து நிதி வரவில்லை என்றனர். பணம் இல்லாததால் பணிகளை நிறுத்தியுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து விசாரித்தபோது, நாடு முழுவதும் இதே நிலை நிலவு வது தெரியவந்தது. எம்பிக்களின் தொகுதி நிதி எதனால் நிறுத்தி வைக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் (http:/mplads.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அதன் தலைப்பிலேயே, “எம்பி, பரிந்துரை மட்டும்தான் செய்வார். நிதியை ஒதுக்கீடு செய்வது, செயல் படுத்துவது, கண்காணிப்பது, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணிகளை முடிப்பது உள்ளிட்ட அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் முழு பொறுப்பு” என குறிப்பிடப் பட்டுள்ளது.

அதில், து.ராஜா எம்பியின் தொகுதி நிதி, 2014-15-ல் முடிக் கப்பட்ட வேறு ஒரு கட்டுமானத்தின் பயன்பாட்டுச் சான்றிதழ் வர வில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல, திமுக எம்பி கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் தொகுதி நிதிகளும், 2013-14-ல் முடிக்கப்பட்ட கட்டுமானங்களின் பயன்பாட்டுச் சான்றிதழ், தணிக்கைச் சான்றிதழ் கள் அளிக்காததால் நிறுத்தி வைக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதே, இணையதளத்தில், கடந்த 4 நிதி ஆண்டுகளின் (2012-13, 2013-14, 2014-15, 2015-16) மொத்த திட்ட நிதியான சுமார் ரூ.15 ஆயிரம் கோடியில், பல்வேறு தவணைகளில் விடுவித்த சுமார் ரூ.10 ஆயிரம் கோடி குறித்த விவரம் மட்டும், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி (ஒரே நாளில்) பதிவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், திட்டக் காலம் முடிந்தும், 3:1 பங்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது தெரியவருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலகங்களில் கேட்டபோது, “நிதி ஒதுக்கீடு குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. அதற்காகத்தான் காத்திருக் கிறோம். நிலுவை சான்றிதழ் களை டெல்லிக்கு அனுப்பிவைத் துள்ளோம். 3:1 பங்கு நிதி நிலு வையில் உள்ளது” என்றனர்.

இதுகுறித்து கட்டுமானப் பொறி யாளர் சங்கத்தின் தஞ்சாவூர் கிளை முன்னாள் தலைவர் ஜோ.ஜான் கென்னடி கூறியபோது, “ஏதோ ஒரு முடிக்கப்பட்ட பணிக்கு மாதாந்திர முன்னேற்ற அறிக்கை (MPR), தணிக்கை, பயன்பாட்டுச் சான்றிதழ் கள் வரவில்லை என்பதற்காக, அந்த எம்பி-யின் அடுத்த ஆண்டு தொகுதி நிதியையும் ஒட்டுமொத்த மாக நிறுத்திவைப்பது தவறு. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜா, ‘தி இந்து’ விடம் கூறியபோது, “சரபோஜி கல்லூரியைப்போல, பல அரசுக் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவ மனைகளுக்கு நிதி பரிந்துரை செய்துள்ளேன். பணிகளை முடிப் பதிலும், நிதியை விடுவிப்பதி லும் ஏற்படும் தாமதம், சிக்கலுக் கான காரணங்கள் என்ன என்பது குறித்து அமைச்ச கத்தில் விசாரிக்கிறேன்” என்றார்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் ஆண் டுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பெரும்பான்மையான எம்பிக் களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட் டுள்ளதால், தமிழ்நாட்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலும், நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சச்சின், மோடி, சோனியாவும் தப்பவில்லை

பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை எம்பியுமான சச்சின் டெண்டுல்கரின் 2014-15ம் ஆண்டுக்கான தொகுதி நிதி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி 2013-14, ஃபியூஸ் கோயல்-2012-13, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 90 சதவீத எம்பிக்களின் 2015-16ம் நிதி ஆண்டுக்கான நிதி நிறுத்தி வைக்கப்பட்டதும், சில எம்பிக்களுக்கு 2011-ம் ஆண்டிலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரியவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x