Published : 18 Mar 2014 08:55 PM
Last Updated : 18 Mar 2014 08:55 PM

தமிழர் பிரதமராவதை வரவேற்கிறோம்!- நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்

`தமிழ் தெரியாதவரை விட, தமிழரே பிரதமராக வந்தால் வரவேற்கிறோம்’ என, நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் திங்கள் கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் பங்கு குறித்து அறிவிக்கப்படும். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தெரியாத நரேந்திர மோடி அல்லது மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் பிரதமர் ஆவதை விட, எங்கள் கோரிக்கையையும் கேட்கும் தமிழர் பிரதமராவதை நாங்கள் வரவேற்கிறோம்.

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கட்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று அதனை சட்ட பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா 3-வது அணியில் இணைந்து பிரதமராகும் பட்சத்தில், நாம் தமிழர் கட்சி அதனை வரவேற்கும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கோட்பாடு களை கொண்ட காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நாங்கள் தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நிபந்தனை இல்லா ஆதரவை தெரிவிப்போம்.

இதுபோல் தூய அரசியல், களங்கமில்லா வாழ்க்கை, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வேட்பாளர்க ளுக்கு நாம் தமிழர்கட்சி ஆதரவு அளிக்கும். வைகோ தனித்துப் போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி களம் இறங்கியிருக்கும். தற்போது அவர் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியை நாம் தமிழர் கட்சி ஏற்று கொள்ளவில்லை.

கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசில் பங்கு வகித்து பலனடைந்த தி.மு.க., கடந்த சட்டப் பேரவை தேர்தலில் பெற்ற படுதோல்வியை மனதில் வைத்தே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் காங்கிரஸை புறக்கணித்துள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார் சீமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x