Published : 16 Sep 2013 12:50 PM
Last Updated : 16 Sep 2013 12:50 PM
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மதுரை அருகே ஆய்வு மையத்துக்கான பணிகளை துவக்கி உள்ளது. அதுவும் தேனியில் உள்ள 'நியூட்ரினோ' அணு துகள் ஆய்வு மையமும் அணு உலைக் கழிவுகளோடு தொடர்பானதா என்கிற சந்தேகம் கிளம்பி உள்ளது.
நியூட்ரினோ ஆய்வுக்காக தேனி, பொட்டிப்புரம் மலையில் ரூ. 1,350 கோடி செலவில் 'நியூட்ரினோ அணு துகள் ஆய்வு மையம்' அமைக்கப்படும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இப்பணியில் பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இருப்பதால் அணுக்கதிர் வீச்சு தொடர்பானவை நடக்கின்றனவோ என்கிற சந்தேகம் கிளம்பி உள்ளது. அதனால், அத்திட்டத்தை மக்கள் எதிர்த்தார்கள். ஆனாலும், மத்திய அரசு அங்கு ஆரம்பக் கட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறது.
இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாத இறுதியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் சிவில் இன்ஜினியரிங் டிவிஷன் சார்பில் ஒரு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மதுரை மாவட்டம், மதுரை தெற்குத் தாலுகா வடபழஞ்சி கிராமம் ஐ.ஐ.சி.எச்.இ.பி. (International Conference on High Energy Physics) சைட்டில் டிடெக்டர் லேபரட்டரிக்காக ரூ.5.5 கோடியில் கட்டடம் கட்டும் பணிக்காக டெண்டர் கோரப்பட்டது. 'ஐ.ஐ.சி.எச்.இ.பி. சைட்' என்று அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயராற்றல் இயற்பியல் மையம் அமைக்க மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட இடம்.
இந்தத் திட்டத்தை இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையோ, நியூட்ரினோ ஆய்வு மையமோ அறிவிக்காமல் நேரடியாக பாபா அணு ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 'கூடங்குளம் அணு உலையில் உருவாகும் அணுக் கழிவுகளை இங்கே வைத்துப் பாதுகாக்கப் போகிறார்கள் என்றும், கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால், அதன் தாக்கம் மதுரையில் இருக்கிறதா? என்று அறிவதற்கான டிடெக்டர் அமைக்கப் போகிறார்கள்' என்றும் மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வடபழஞ்சி பஞ்சாயத்துத் தலைவர் விமலா வைரமணி, “இங்கு சிறு கட்டடம் கட்டக்கூட ஊராட்சியின் அனுமதி தேவை. ஆனால், அவர்கள் அனுமதி கேட்கவும் இல்லை. என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லவும் இல்லை. நியூட்ரினோ என்று பேசிக்கொள்கிறார்கள். எதுவும் புரியவில்லை” என்றார்.
இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளிடம் பேசியபோது 'தங்களுக்கு எதுவும் தெரியாது' என்றார்கள்.
பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் சிவில் இன்ஜினியரிங் பிரிவின் திட்ட அதிகாரி சிவராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “மதுரையில் அணுக்கழிவு ஆராய்ச்சி நடக்காது. பொட்டிபுரத்தில் அமைய உள்ள ஆய்வு மையத்தின் ஒரு பகுதி இங்கு செயல்படும். 30 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். விரைவில் 1.75 கோடி செலவில் சுற்றுச்சுவர், கம்பி வேலி அமைக்கப்படும். அடுத்த கட்டமாக 5.5 கோடியில் ஆய்வு மையம் கட்டப்படும். முன்னதாக மண் ஆய்வுப் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் மதுரையில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் வேதியியல் புலத் தலைவர் டாக்டர் ஜெகதாப்பிடம் பேசியபோது, “அணு உலைக்கழிவுகளை அழிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது குறித்து கண்டறிவதே மதுரையில் அமையவிருக்கும் மையத்தின் முக்கியப் பணி. தவிர, கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கும், வடபழஞ்சியில் அமைய உள்ள ஆய்வு மையத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் கிடையாது” என்றார்.
சுப.உதயகுமாரிடம் இது பற்றி கேட்டோம், “டெண்டர் விளம்பரங்களை பார்த்தேன். மதுரை அருகே அமையவிருப்பது அணுக்கழிவு அழிப்பு மையம்தான். பொட்டிபுரம் மலைக்கு அடியில் குகை அமைப்பதன் நோக்கமே அணுக்கழிவுகளை பதுக்குவதற்குதான் என்பது எங்கள் கருத்து. எல்லா அணுக்கழிவுகளையும் உள்ளே கொட்டி, மூடிவிட்டுப்போய்விடுவார்கள். கடைசியில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படுவது மக்கள்தான். மதுரையில் அமையவிருக்கும் அணுக்கழிவு ஆராய்ச்சி மையத்துக்கு எதிராகவும் போராடுவோம்” என்றார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனும் இது அணுக்கழிவுகளைக் கொட்டும் திட்டம் என்கிறார். “அணு உலைகள் இருக்கிற நாடுகளில் எல்லாம் டி.ஜி.ஆர். (Deep geological repository) என்ற பூமிக்கடியில் அணுக்கழிவுகளைக் கொட்டும் மையங்கள் இருக்கின்றன. இந்தியாவும்கூட அப்படியொரு மையத்தை அமைத்தே ஆக வேண்டும். கூடங்குளம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அணுக்கழிவுகளை எங்கு கொட்டப்போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினோம். முதலில் கோலாரில் என்றார்கள். எதிர்ப்பு வெளியானதும் பின்வாங்கினார்கள். இதுவரை வேறு பெயரில் திட்டங்களை அறிவித்து வந்த பாபா அணுசக்தி மையம் மதுரை திட்டத்தை நேரடியாக தனது பெயரிலேயே விளம்பரமாக கொடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது” என்கிறார் சுந்தர்ராஜன்.
மதுரை கலெக்டர் சுப்பிரமணியமோ, “திட்டம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்” என்றார்.
மக்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT