Published : 20 Apr 2017 12:57 PM
Last Updated : 20 Apr 2017 12:57 PM
ஏன் வருவதில்லை அம்மாவின் தொண்டன் ?
தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து வரும் அதிமுக தொண்டர்கள், தவறாமல் பார்க்க கூடிய இடங்கள் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, தலைமைக் கழகம், அம்மா வீடு (ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்). இந்த பட்டியலில் தற்போது ஜெயலலிதாவின் நினைவு இடம் சேர்ந்துள்ளது. ஆனால் போயஸ் தோட்ட இல்லம் பழைய பரபரப்புகள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
போயஸ்ஸில் இல்லை பரபரப்பு
டிசம்பர் 5 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா கைது செய்யப்படும் வரை கட்சிக்காரர்கள் தினசரி வந்து செல்லும் இடமாக இருந்தது போயஸ் தோட்டம். ஆனால் அதன் பிறகு மெல்ல கூட்டம் குறைய ஆரம்பித்து தற்போது வெறிச்சோடி உள்ளது. பின்னிசாலை வளைவு தொடங்கி வேதா இல்லம் வரை எப்போதும் ஆயிரக்கனக்கானோர் இருந்த காட்சிகள் எல்லாம் இப்போது இல்லை. போயஸ் தோட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் அமைதி இங்கும் நிலவுகிறது. Z + பாதுகாப்பில் இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் வீட்டைச் சுற்றி தீவிர கண்காணிப்புகள் இருக்கும். அதனால் அந்தப் பகுதியில் குடியிருப்போரின் வாகனங்கள் கூட தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும் ஆனால் தற்போது அந்த கெடுபிடிகள் ஏதும் இல்லாமல் இயல்பாக சென்று வர முடிகிறது என்கின்றனர் போயஸ் தோட்ட வாசிகள். எப்போதாவது வார இறுதி நாட்களில் வெளியூரிலிருந்து வரும் தொண்டர்கள் போயஸ் இல்லத்தை பார்வையிட வருகிறார்கள் என்கிறார் அந்த பகுதியில் தேநீர் கடை வைத்திருந்த ரவி. பேனர்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை வேதா இல்லத்துக்கு அருகே தடுப்புவேலி அமைத்து போலீஸார் மட்டும் சிலர் பணியில் உள்ளனர்.
காலியான வீடாக உள்ளது கார்டன்
போயஸ் தோட்டத்தில் துப்புரவுப் பணியில் இருந்த பூபதி அக்காவிடம் பேசினோம்.
இந்தப் பகுதியில் நீங்க எத்தனை வருஷமா வேலை பார்க்குறீங்க?
நான் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர். 17 வருடமா இதே பகுதியில்தான் இருக்கேன் என்றார்.
ஜெயலலிதா மறைந்து 5 மாதங்களாகிவிட்டன. அவர் இருந்துபோது இந்தப் பகுதி பரபரப்பாகவே இருந்திருக்கிறோம். இப்போ இந்தப் பகுதியில் வேலைபார்க்கிறது எப்படி இருக்கு?
அந்த அம்மா இறந்துபோனத இன்னும் மறக்கமுடியலம்மா.. முன்பெல்லாம் எப்பவும் இந்தப் பகுதியில் திருவிழா நடக்குற மாதிரி இருக்கும். திருவிழா கூட்டத்துக்குள் நுழைந்து வருவதுபோல் இருக்கும். இப்போ ஏதோ காலியான வீட்டுக்குள்ள சுத்துற மாதிரி இருக்கு என்று தனக்குத் தெரிந்த உவமையில் வெறுமையை விளக்கினார்.
இடம் மாறிய நிகழ்வு களம்
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் நொடிக்கு ஒரு திருப்பமாக மாறிக் கொண்டுள்ள நிலையில் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறது போயஸ் தோட்ட இல்லம். அதிமுக மூன்று அணிகளாக மாறி விட்ட நிலையில் அந்த அந்த அணியைச் சேர்ந்தவர்கள் கீரின்வேஸ் சாலைக்கும், அடையாருக்கும் சென்றுவிடுகிறார்கள்,
26 ஆண்டுகால தமிழக அரசியலின் மையப் புள்ளி
1991க்குப் பிறகு தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசியல் மாற்றங்களிலும் தனக்கான பங்கை தவறாமல் வகித்து வந்த போயஸ் கார்டன் பகுதி, தற்போது களையிழந்துள்ளது, அந்த இடத்தை கிரீன்வேஸ் சாலை பிடித்திருக்கிறது. கார்டனில் நடந்த அரசியல் நிகழ்வுகளுக்கும், கிரீன்வேஸ் சாலையில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படை ஒன்று தான் , நிகழ்வு முறையும் காட்சிகளும் தான் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. அன்று அங்கு சத்தமே இருக்காது, இன்று இங்கு சத்தம் மட்டுமே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT