Published : 23 May 2017 12:22 PM
Last Updated : 23 May 2017 12:22 PM
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி நீதிமன்றம் அருகே ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க் காவல்படை வீரரான ஜி.பெல்சன் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் மைக்கில் பேசினார். இதையடுத்து, பெல்சனை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன்பின் இதுவரை அவருக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பெல்சன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: எனது சொந்த ஊர் லால்குடி அருகேயுள்ள செம்பறை. தற்போது உறையூர் மேட்டுத்தெருவில் வசித்து வருகிறேன். கடந்த 2000-ம் ஆண்டில் திருச்சி மாநகர ஊர்க் காவல்படையில் சேர்ந்தேன். மெச்சத்தக்க பணிபுரிந்ததற்காக இதற்குமுன் ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், தற்போதைய ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளேன்.
ஜல்லிக்கட்டு மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நானும் மாடுபிடி வீரராக இருந்தேன். அந்த உணர்ச்சியால், மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மைக்கில் பேசிவிட்டேன். அதன்பின் விதிகளை மீறி நடந்து கொண்டதை போலீஸார் சுட்டிக்காட்டி எச்சரித்தனர். தவறை உணர்ந்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகளிடம் நேரில் மன்னிப்பு கேட்டேன். ஆனால், இதுவரை மீண்டும் எனக்கு பணி வழங்கப்படவில்லை. தவறை மன்னித்து, கருணை அடிப் படையில் மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து திருச்சி மாநகர ஊர்க்காவல்படை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெல்சன் இன்னும் பணியிலிருந்து நீக்கப்பட வில்லை. விதிகளை மீறி தவறு செய்ததால், அவருக்கு பணி வழங்கப்படவில்லை. அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்குவது குறித்து மாநகர காவல் ஆணையர் முடிவெடுப்பார்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT