Published : 22 Oct 2013 09:30 AM
Last Updated : 22 Oct 2013 09:30 AM

கூடங்குளம்: முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியதாகவும், முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்ய 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் மாஸ்கோ சென்றுள்ள நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 2011-ம் ஆண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தின் ஆயத்தப் பணிகள் தாமதமானதை அடுத்து மின் உற்பத்தியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கூடங்குளமும் இடிந்தகரை போராட்டமும்

இதற்கிடையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் தலைமையில் போராட்டங்கள் வலுத்தன.

அணு உலை பாதுகாப்பானது அல்ல, கொதி நீர் கடலில் சேர்வதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும், பேரிடர் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து போராட்டங்கள் நடை பெற்றன. இதனால், அணு மின் நிலைய பணிகள் மேலும் தாமதமானது.

இதனைத் தொடர்ந்து அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின.

மின் உற்பத்தி இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என பல்வேறு நேரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

முதல் நாளில் 160 மெகாவாட்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முதலாவது அணு உலையில் முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

முதற் கட்டமாக 75 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், பின்னர் 160 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ததாகவும் கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்தி கழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு துவங்கும் என்றார்.

உதயகுமார் கருத்து:

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஏமாற்று நாடகம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

"கடந்த ஜூலை 13-ம் தேதியே மின் உற்பத்தி தொடங்கிவிட்டதாக அறிவித்தார்கள். இப்போது மீண்டும் மின் உற்பத்தி செய்துள்ளதாக புதிதாக கூறுகிறார்கள்.

அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து, எங்களது ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x