Published : 14 Jan 2014 12:22 PM
Last Updated : 14 Jan 2014 12:22 PM

நான் ஆழம் தெரியாமல் காலை விடவில்லை: கருணாநிதி

"இட ஒதுக்கீடு பிரச்சினையில் நான் ஆழம் தெரியாமல் காலை விடவில்லை. இட ஒதுக்கீடு பிரச்சினை திராவிட இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தது" என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

"பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா" என்ற தலைப்பில் "சமூக நீதிப் பாதுகாப்பு சிறப்புப் பொதுக் கூட்டம்" திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி: இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆழம் தெரியாமல் தான் காலை விட்டு விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது: "இந்தியாவிலேயே முதல் முறையாக பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காக திரு. ஏ.என். சட்டநாதன் தலைமையில் ஒரு குழு நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தான் 13-11-1969 அன்று அமைக்கப்பட்டது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன் வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை 12-5-1989 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் முன் மொழிந்தவனே நான் தான். 5-2-1990 அன்று நான் டெல்லி சென்றிருந்த போது, துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர்களைச் சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டவனும் நான் தான்" என்றார்.

தேர்தல் ஆதாயம் இல்லை:

மேலும், "எந்தப் பிரச்சினையையும் தேர்தல் கண்ணோட்டத்துடன் அணுகும் கருணாநிதி தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், தான் கையில் எடுத்த ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடைந்த நிலையில், "சமூக நீதி"யை கையில் எடுத்துக் கொண்டு" அறிக்கை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

தேர்தலுக்காக எடுத்துக் கொள்ளப்படுவதல்ல சமூக நீதிப் பிரச்சினை. திராவிட இயக்கத்தோடு பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினை இது, என தெரிவித்தார்.

ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடையாது:

ஈழத் தமிழர் பிரச்சினை தோல்வி அடையவும் இல்லை. தோல்வி அடையவும் அடையாது.ஜெயலலிதாவின் இந்தக் கூற்றினை உலகெங்கிலுமுள்ள ஈழத் தமிழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால், தோல்வி அடைந்ததாகத் தெரியலாம், என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x