Published : 17 Jan 2017 09:58 AM
Last Updated : 17 Jan 2017 09:58 AM
பொதுமக்களுக்கான அரசு சேவைகளை ஆன்லைனில் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலம் 26-வது இடத்திலும் தமிழகம் 5-வது இடத்திலும் இருப்பதாக அரசின் ஆன்லைன் சேவைகள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தரும் மத்திய அரசின் இணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் மாநிலங்களின் முக்கிய அடையாளமாக குஜராத் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கான அரசு சேவைகளை அளிப்பதில் இந்தியாவிலேயே 26-வது இடத்தில் இருக்கிறது குஜராத்.
இந்திய அளவில் நிதித் துறையில் 42, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 32, பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய துறையில் 36, வெளியுறவுத் துறையில் 24, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் 22, ரயில்வே துறையில் 16, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் துறையில் 12, சுற்றுலாத் துறையில் 12, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் 11, சட்டம் மற்றும் நீதித் துறையில் 6 என மொத்தம் 42 துறைகளைச் சேர்ந்த 372 அரசு சேவைகள் தற்போது ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், இமாச்சலச் பிரதேசம் மொத்தம் 73 வகையான அரசு சேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்கி ஆன்லைன் சேவையில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தபடியாக டாமன் டையூ யூனியன் பிரதேசம் 69 சேவைகளை வழங்கி 2-வது இடத்தையும், ஆந்திர மாநிலம் 60 சேவைகளை வழங்கி 3-வது இடத்தையும், டெல்லி 55 சேவைகளை வழங்கி 4-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
தமிழகம் 54 வகையான அரசு சேவைகளை ஆன்லைன் மூலமாக அளித்து 5-வது இடத்தை தக்க வைத்துள்ளது. வளர்ச்சிக்கு அடையாளமாகக் காட்டப்படும் குஜராத்தில் மொத்தமே 12 வகையான அரசு சேவைகள் மட்டுமே ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருவதால் இந்த மாநிலம் ஆன்லைன் சேவையில் 26-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி 13 வகையான அரசு சேவைகளை ஆன்லைனில் வழங்கி குஜராத்தை பின்னுக்குத் தள்ளி 25-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2 சேவைகளை மட்டுமே ஆன்லைனில் வழங்குவதால் மிசோரம் 36-வது (கடைசி) இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பதிவுத் துறையில் குறிப்பிட்ட சில சேவைகள், சுற்றுலா, கல்வி உதவித் தொகை, வணிகவரித் துறை மற்றும் வீட்டுவசதி வாரியத்தில் குறிப்பிட்ட சில சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் நலனில் சில சேவைகள் இவை மட்டுமே தற்போது ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 372 சேவைகளில் பாப்புலர் சேவைகளாக 10 சேவைகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த 10-ல் 4 சேவைகளை கோவா மாநிலமும் பிறப்பு இறப்பு பதிவு, பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட 3 சேவைகளை ஆந்திர மாநிலமும் வழங்குகின்றன. குஜராத் மற்றும் தமிழகம் இந்த 10 சேவைகளில் எதையுமே ஆன்லைன் மூலமாக மக்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT