Published : 15 Sep 2016 08:59 AM
Last Updated : 15 Sep 2016 08:59 AM

காரில் சென்று குப்பை அகற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி: 81 வயதிலும் சோர்வடையாமல் சேவை- மனநிறைவு கிடைப்பதாக பெருமிதம்

குப்பைக்கூளம் இல்லாத சுத்தமான சுற்றுப்புறத்தில் வாழ்வது இன்று அரிதாகிவிட்டது. பொருளாதா ரத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய இயந்திர வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடும் மனிதர்கள், சுற்றுப்புறத்தையும், குப்பையையும் கண்டுகொள்வது இல்லை. அக்கறை காட்டுவதும் இல்லை. குப்பை அள்ளுவது நமக்கான வேலை இல்லை என கடந்து செல்கின்றனர். சுத்தம் என்பது, ஒருவர் அணியும் ஆடையில் இல்லை. அவரின் வீடு, சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலேயே இருக் கிறது என்கிறார் மதுரை எல்லீஸ் நகர் வசந்தம் குடியிருப்பைச் சேர்ந்த 81 வயது ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தாயுமானசாமி.

எல்லோரையும்போல் இவர் சுற்றுப்புறத்தில் கிடக்கும் குப்பை யைக் கண்டு ஒதுங்கிச் செல்ல வில்லை. தினமும் காலையில் துப் புரவுத் தொழிலாளராக மாறிவிடு கிறார். கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பில் துப்புரவுத் தொழிலாளர் போல் குப்பையை அகற்றுகிறார். அடைப்பு ஏற்பட்ட சாக்கடைக் கால்வாய்களில் கையை விட்டுச் சரி செய்கிறார். பாதாளச் சாக்கடையில் குச்சிகளை விட்டு, தடையின்றிக் கழிவு நீர் செல்ல வைக்கிறார். அன்றாடம் இந்த வேலைகள் முடிந்ததும் சேகரித்த குப்பையை, ஒரு வாளியில் கொட்டி காரில் எடுத்துக்கொண்டு குடியிருப்பின் மூலையில் இருக்கும், குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்.

இப்பணியை ஏதோ ஒருநாள், இரண்டு நாள் இவர் செய்ய வில்லை. ஓய்வு பெற்ற 1994-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை என்றாலும், வீட்டில் முடங்கிவிடாமல் வாக்கர் வைத்துக்கொண்டு வழக்கம் போல் குப்பையை அப்புறப்படுத்தி அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பை வசந்தமாக வைத்து வருகிறார்.

இதுகுறித்து தாயுமானசாமி கூறியதாவது: “எனது தாயார் ஆசிரியராக இருந்தவர். இருந் தாலும் விடுமுறை நாட்களில் வயலில் போய் களை எடுப்பார், நாற்று நடுவார். அவரே குப்பையைக் கொண்டு போய் குப்பைக் கிடங்கில் கொட்டுவார். அவரிடம் கற்றுக்கொண்டதுதான் இந்தப் பழக்கம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 107 வீடுகள் இருக்கின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் ஒழுங்காக வராததால் தெருக் களில் குப்பை தேங்கும். மாநக ராட்சியில் புகார் செய்தேன். குப்பையை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் நானே குப்பையை அகற்றத் தொடங்கினேன். இதில் ஒரு மனநிறைவு கிடைத்ததால் தொடர்ந்து செய்கிறேன். இதற்காக மற்றவர்களின் நன்றியை, பாராட்டை எதிர்பார்ப்பதில்லை.

நான் குப்பையை அகற்றி, காரில் கொண்டுபோய் கொட்டுவதைப் பார்த்து சிலர், இவருக்கு ஏன் இந்த தேவையில்லா வேலை என சொல்வார்கள். எதிரே வரு பவர்களில் சிலர் வெட்கப்பட்டு ஒதுங்கிப் போவார்கள். சிலர், மனம் திருந்தி குப்பையைக் கீழே கொட்டத் தயங்கி அவர்களும் என்னைப் போல் குப்பைத் தொட்டியில் போடத் தொடங்கிவிட்டார்கள். இந்த மனமாற்றம்தான் தேவை. உடனடியாக இது நடக்காது. மெதுவாகவே நடக்கும். அவரவர் வேலைகளைச் சரியாக செய்தாலே சுற்றுப்புறம் தானாகவே சுத்தமாகிவிடும். குப்பையைத் தினமும் அகற்றுவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. என்னுடைய வயது, முதுமைதான் தடுக்கிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x