Published : 03 Nov 2014 08:21 AM
Last Updated : 03 Nov 2014 08:21 AM

கூட்டணி அமைப்பதில் பலவீனமாகும் திமுகவின் ராஜதந்திரம்: மதிமுகவை இழுப்பதில் 3-வது முறையாக சறுக்கல்

திமுகவுடன் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்திருப்பது, அக்கட்சி தலைமையிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் திமுகவின் ராஜதந்திரம் பலவீனமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுமார் 9 ஆண்டுகள் திமுகவுடன், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூட்டணியில் இருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை முறித்துக் கொண்டது திமுக. பின்னர், புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. தேமுதிகவுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தது. விஜயகாந்தை விமர்சித்த தன் மகன் மு.க.அழகிரியையே கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி. ஆனால், கடைசி வரை சஸ்பென்ஸை நீட்டித்த தேமுதிக, கடைசியில் பாஜக பக்கம் போய்விட்டது.

இதேபோல்தான் பாமக, மதிமுகவுக்கு விரித்த வலையும் பலனளிக்கவில்லை. தாங்கள் போட்ட கூட்டணி கணக்குகள் தப்பாகிப் போனதால், கடைசியில் வேறு வழியின்றி காங்கிரஸாவது எப்படியும் கூட்டணிக்கு வரும் என்று திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டது. வேறு வழியின்றி சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்த திமுக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என திட்டமிட்ட திமுக, அதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால், இப்போதும் முதல் முயற்சியே கோணலாகியுள்ளது.

தனியார் டி.வி.க்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் எனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை’ என்றார். அதன்பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துப் பேசினர். முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இருவரும் ஒரே விமானத்தில் மதுரை சென்றனர். இந்த சந்திப்புக்குப் பின், ‘திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி’ என்று கருணாநிதியும் ஸ்டாலினும் தெரிவித்தனர். இதையடுத்து, திமுக – மதிமுக இடையே கூட்டணி என்பதுபோல தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

ஆனால், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்ட வைகோ, திமுகவுடன் கைகோர்க்கும் எண்ணம் இல்லை என்று நேற்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஈரோடு கணேசமூர்த்தி இல்லத் திருமண விழாவில் வைகோ இவ்வாறு பேசியது, திமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து மதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உள்கட்சிப் பிரச்சினை, கட்சியில் அடுத்த தலைவர் யார் என்ற போட்டிகளும் அங்கு நிலவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழருக்கு எதிரான போரின்போது, இலங்கைக்கு உதவிய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்ததை எப்போதும் மறக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், திமுக பலவீனமாகவே உள்ளது. எனவே, தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்வது மதிமுகவுக்குதான் சறுக்கலை ஏற்படுத்தும்’’ என்றனர்.

இதுபற்றி திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2001, 2006 தேர்தல்களிலும் திமுகவை நம்ப வைத்து, கூட்டணி மாறியது மதிமுக. ஸ்டாலினுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டில்தான், திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். தற்போது திமுக தலைமையை வழி நடத்தத் தயாராக இருக்கும் ஸ்டாலினின் வழிகாட்டுதலை ஏற்று, வைகோ கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்க முடியாது. வைகோவுடன் கூட்டணி வைப்பது திமுக அணியில் முரண்பாடுகளையே அதிகரிக்கும்’’ என்று கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக திமுகவின் தேர்தல் கணக்குகள் சரியான வெற்றியைத் தரவில்லை. கூட்டணி சேர்வதிலும், தேர்தலிலும் திமுகவின் ராஜதந்திரம் வலுவிழந்து விட்டதாகவே, சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ‘கட்சியை கருணாநிதி மீண்டும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அவரது ராஜதந்திரம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும்’ என்ற கோரிக்கை திமுகவில் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x