Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு; 30-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை

தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு 30-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி யாசின் பக்தல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1999-ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திச் சென்று, சில தீவிரவாதிகளை விடுதலை செய்ய வைத்ததுபோல, இப்போதும் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் 3 அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையத்துக்கு 2 அடுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 300 பேர் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகர போலீஸார் நூறு பேர் விமான நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையம் அருகில் உள்ள கார் பார்க்கிங் பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கார் பார்க்கிங்கை சுற்றியுள்ள சாலையிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்துக்குள் செல்லும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் ஆகியவை சோதனை செய்யப்பட்ட பின்னரே பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு கருதி பயணிகளின் உறவினர்களுக்கும் பார்வையாளர் களுக்கும் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை விமான நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x