Published : 17 Jan 2017 12:19 PM
Last Updated : 17 Jan 2017 12:19 PM
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை கண்காணிக்கவோ, அறிக்கை அளிக்கவோ பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் சார்பில் எந்த உத்தரவும் வரவில்லை என இந்த அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்தபோது, இதை பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் தீவிரமாகக் கண்காணிப்பர். தகுதியான காளைகளை பதிவு செய்வதிலும், மது அருந்தாமல் வீரர்கள் களத்தில் இருப்பதையும் உறுதி செய்வர்.
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் எந்த நிலையிலும் துன்புறுத்தப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்த இந்த அமைப்பு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை முழுமையாக கேமராவில் பதிவு செய்யும். இதற்கு மாவட்ட நிர்வாகமே சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்தது.
ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு முடிந்ததும் இந்த அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியரும் அறிக்கை அளிப்பார்.
இந்த அறிக்கையை பரிசீலித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை நீதிமன்றம் அளித்தது. உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறி காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்தே ஜல்லிக்கட்டிற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் பெரிய அளவில் போராட்டங்கள் இல்லை. சில இடங்களில் காளை அவிழ்ப்பு மட்டும் நடந்தன. இதனால் பீட்டா அமைப்பும் கண்டுகொள்ள வில்லை.
இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியதுடன், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்தனர். இதனால் வழக்கத்தைவிட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக வாடிவாசல் அமைத்து அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
கடந்த 3 நாட்களாகவே சில கிராமங்களில் காளைகளை அவிழ்ப்பதும், விரட்டுவதுமான சில சம்பவங்கள் நடந்தன. இது குறித்து மதுரை மாவட்ட பீட்டாவின் பிரதிநிதியும், பீப்பிள் பார் அனிமல் நிர்வாகியுமான ஒருவர் கூறியது:
நீதிமன்ற கட்டுப்பாட்டிற்குட் பட்டு ஜல்லிக்கட்டு நடக்கிறதா என்பதை கண்காணித்து ஆண்டு தோறும் அறிக்கை அளிப் போம். ஜல்லிக்கட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவோம். தற்போது தடை இருப்பதால், அதிகாரிகள் எங்களை அழைத்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
தடையை மீறி ஜல்லிக்கட்டு, காளை அவிழ்ப்பு போன்ற சம்பவங்களில் காளைகள் துன்புறத்தல் இருந்ததா? எனக் கண்காணிக்குமாறு பீட்டா, விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அறிக்கையும் கோரவில்லை.
மீடியாக்களில் வெளியாகும் படங்கள், வீடியோக்களை சேகரிக்கவும், இதன் அடிப் படையில் செயல்படவும் பீட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT