Published : 26 Sep 2016 09:46 AM
Last Updated : 26 Sep 2016 09:46 AM
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, கர்நாடகாவில் இருந்து ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் சுமார் 2,000 டி.எம்.சி. தண்ணீரின் ஒரு பகுதியை தமிழகத்துக்கு திருப்பும் ‘நீர் மேலேற்றுத் திட்டத்தை’ செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.
1991-ல், தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண் ணீரை தரவேண்டும் என நடுவர்மன்ற இடைக் கால தீர்ப்பு வெளியானபோது, கர்நாடகாவில் அதிக அளவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘விமோசனா’ என்ற பெண்கள் உரிமைக்கான அமைப்பு.
2002-ல் தமிழகத்தில் கடும் வறட்சி தாண்டவ மாடியது. அந்த சமயத்தில் டெல்டா விவசாயி களின் உண்மை நிலையை அறிவதற்காக கர்நாடக விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு டெல்டா மாவட்டங்களுக்கு வந்தது ‘விமோசனா’. டெல்டா விவசாயிகளின் பரிதாப நிலையைக் கண்கூடாக கண்டவர்கள், இங்கு உள்ள விவசாய சங்கப் பிரநிதிகளை கர்நாடகாவுக்கும் அழைத்துச் சென்று அங்கு உள்ள நிலைமையை காட்டினார்கள்.
விழித்துக்கொண்ட கர்நாடகா
அக்குழுவில் சென்றவர்களில் ஒருவரான தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறும்போது, “இப்போது கர்நாடகாவில் விளைச்சல் நிலங்களாக மாறி இருக்கும் இந்த அணைகள் சார்ந்த பகுதிகள் 110 ஆண்டுகளுக்கு முன்பு பொட்டல் காடாகத்தான் இருந்திருக்கின்றன. பழைய தென்னாற்காடு, வடஆற்காடு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் அங்கு போய் விளைநிலங்களை உருவாக்கி உள்ளனர். அணைகளுக்குப் பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான ஏரிகளை அவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
ஆறுகளில் இருந்து அணைகளுக்கு வரும் தண்ணீரை ஏரிகளில் நிரப்பிவிட்டு, உபரியைத்தான் அணைகளுக்கு அனுப்புகின் றனர். அணைகளிலும் தங்களுக்குத் தேவையான தண்ணீரை நிரப்பிக்கொண்டு எஞ்சியதைத்தான் நமக்கு திறந்து விடுகின்றனர்.
கலைந்துபோன காவிரி குடும்பம்
‘விமோசனா’ எடுத்த முயற்சிக்குப் பிறகு, 2004 ஜூனில் கர்நாடக ரயத் சங்கத்தினரும் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து ‘காவிரி குடும்பம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இதில் மாநிலத்துக்கு தலா 20 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் தலா 5 பேர் முக்கிய முடிவுகளை எடுக்கும் ‘கோர் கமிட்டி’ உறுப்பினர்கள்.
காவிரி குடும்பத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு சென்னை வளர்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனத்திடம் (எம்.ஐ.டி.எஸ்) ஒப்படைக்கப்பட்டது. காவிரி குடும்ப ‘கோர் கமிட்டி’யின் தொழில்நுட்ப வல்லுநர்களாக கர்நாடக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கான வேளாண் ஆலோசகர், உலக வங்கியின் நீரியல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற பொறியாளர் பவானி சங்கர், தமிழகத்தின் சார்பில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் நடராஜனும் இருந்தனர்.
காவிரி குடும்பக் கூட்டங்களில் கலந்துகொண்ட பவானி சங்கர், யாருக்கும் பிரச்சினை இல்லாத மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார். ஆண்டுதோறும் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையில் 1,900 முதல் 2,000 டி.எம்.சி வரையிலான நீரானது நேத்ராவதி, காளி, சாராவதி, சக்ரா உள்ளிட்ட சிற்றாறுகள் வழியாக மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கிறது.
இப்படி வீணாகும் தண்ணீரை ‘நீர் மேலேற்றுத் திட்டத்தின்’ மூலம் மீண்டும் மலை உச்சிக்கு ஏற்றி அதை மறுபுறமாக மேலிருந்து கீழே விழச்செய்து ஹேமாவதி அணைக்குக் கொண்டுவந்தால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 300 டி.எம்.சி. தண்ணீரை தன்போக்கிலேயே கொண்டுவர முடியும் என்பதுதான் பவானி சங்கர் சமர்ப்பித்த புதிய திட்டம். இந்தத் திட்டத்துக்கான சாத்தியம் குறித்த தொழில்நுட்ப தகவல்கள் உள்ளிட்டவைகளையும் விளக்கினார்.
தமிழக விவசாயிகள் இந்த யோச னையை வரவேற்றனர். ஆனால், கர்நாடக விவசாயிகள் ஏற்கவில்லை. தனது முடிவில் பின்வாங்காத பவானி சங்கர், கர்நாடக முதல்வருக்கும் பிரதமருக்கும் தனது திட்டம் குறித்து கடிதம் எழுதினார். இதைப்பற்றி யாருமே ஏனென்று கேட்காத நிலையில், தனது 88 வயதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார் பவானி சங்கர்.
பிரதமர் முன்வர வேண்டும்
தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு அன்றைய தேதியில் ரூ.1,100 கோடி செலவாகும் என்று சொன்னார் பவானி சங்கர். மலைகளில் இருந்து தண்ணீரை விழவைப்பதன் மூலம் நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யலாம். அந்த மின்சாரத்தை வர்த்தகப்படுத்தி திட்டச் செலவை மீண்டும் எடுத்துவிடலாம் என்று யோசனை சொன்ன பவானி சங்கர், சீனா உள்ளிட்ட நாடு களில் நீர் மேலேற்றுத் திட்டம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பட்டியலிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என்றார் விமல்நாதன்.
காவிரி குடும்ப ‘கோர் கமிட்டி’யின் இன்னொரு உறுப்பினரான பொறியாளர் நடராஜனை தொடர்புகொண்டபோது, “பவானி சங்கர் அளித்த திட்டத்தின்படி தமிழகத்துக்கு 900 டி.எம்.சி. வரை தண்ணீரைக் கொண்டு வரமுடியும். மலை உச்சி வரை தண்ணீரை எடுத்துச் செல்ல முடியாதபட்சத்தில் மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி கொண்டுவர முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT