Published : 01 May 2017 06:32 PM
Last Updated : 01 May 2017 06:32 PM

ரஜினியை சந்திக்கும் ரசிகர்கள் ஆவணப்படுத்த ‘மை ஸ்டாம்ப்’ முகாம் ஏற்படுத்த வேண்டும்: முன்னாள் அஞ்சல் துறை அலுவலர் ஆலோசனை

தமிழக ரசிகர்களை மாவட்ட வாரியாக ரஜினியை தினம் 500 பேர் வீதம் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் மன்றங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அச்சடித்துக் கொடுக்கும் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட நிர்வாகிகள் பெற்று தலைமைக்கு பூர்த்தி செய்து அனுப்பி வருகிறார்கள். இப்படி ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ரசிகர்கள் தம் சந்திப்பை அஞ்சல்துறையின்‘மை ஸ்டாம்ப் திட்டத்தில் பதிவிட்டு ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு ரஜினி ரசிகர்களை சந்திக்கும் இடத்திலேயே ஒரு முகாமை அஞ்சல்துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ஓய்வு பெற்ற முன்னாள் அஞ்சல் துறை அலுவலர் ஹரிஹரன். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘தபால் துறையின் வருமானத்தை அதிகரித்து அத்துறையை நிலை நிறுத்தவும், அதன் பாரம்பர்ய பெருமையில் மக்களை இணைத்துக் கொள்ளவும் 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ‘மை ஸ்டாம்ப்’ திட்டம். மாவட்டங்களில் உள்ள தலைமை அஞ்சலக தபால்தலை சேகரிப்பு மையத்தில் தன் புகைப்படத்தை கொடுத்து ரூ. 300 செலுத்தி தன் உருவத்துடன் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் உடனே ரூ. 5 மதிப்பிலான 12 அஞ்சல் தலைகள் கொண்ட ஒரு சீட் அச்சடித்து தரப்படும். அதை விண்ணப்பித்தவர் ஆவணமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தன் நண்பருக்கு அந்த ஸ்டாம்ப்பை பயன்படுத்தி தபால் அனுப்பி மகிழ்விக்கலாம்.

தற்போது இந்த வாய்ப்பை பள்ளி, கல்லூரிகள், திருமண விழாக்களில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். 2 மாதம் முன்பு கோவையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர் ஒருவர் தன் பெண்ணின் திருமணத்தில் மை ஸ்டாம்ப் முகாமை மண்டபத்திலேயே வைத்தார். இதன் மூலம் 15 ‘சீட்’டுகள் தன் மகள்- மருமகனின் மை ஸ்டாம்ப் அட்டைகளை வெளியிட்டார். அத்தோடு விருந்திற்கு வந்தவர்களும் தன் ஸ்டாம்ப்களை வெளியிட்டுக் கொண்டனர். இதன் மூலம் அஞ்சல்துறைக்கு வருமானம். வந்தவர்களுக்கும் பெருமை. அதுபோல ரஜினியை சந்திக்கும் ரசிகர்களுக்கும் ஒரு மை ஸ்டாம்ப் முகாம் ஏற்படுத்தினால் ரசிகர்கள் ஆர்வமுடன் அதில் பங்கேற்பர். ரஜினியுடன் தான் இருக்கிற புகைப்படத்தை ஸ்டாம்ப் ஆக அங்கேயே வெளியிட்டு மகிழ்வர். ரஜினி பிறந்த நாளான்று அதை பொக்கிஷமாக வைத்து நினைவு கூர்வர். தினசரி 500 பேருக்கு மேல் ரஜினியுடன் புகைப்படம் எடுப்பதால் அதில் பாதிப்பேர் ஸ்டாம்ப் வெளியிட்டால் கூட அஞ்சல்துறைக்கு நல்ல வருமானம் இருக்கும்.

ஏற்கனவே அஞ்சல் அட்டைகள் அச்சடித்து வெளியிடுவதில் ஒரு அட்டைக்கு ரூ. 3 செலவாகிறது. எனவே 1 லட்சம் அட்டைக்கு ரூ.2 லட்சம் செலுத்தினால் அவர்களின் விளம்பரம் அஞ்சல் அட்டையின் ஒரு பகுதியில் இடம் பெறுகிற மாதிரி திட்டம் அஞ்சல்துறையால் அறிவிக்கப்பட்டது. அதன் பெயர் ‘மேக்தூத்’. ரஜினி நடித்த பாபா படத்தை முதன் முதலில் இந்த திட்டத்தில் அச்சடித்து வெளியிட்டனர். அதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் ரஜினி. அதேபோல் கோவையில் எந்திரன் படம் வந்தபோது பட விநியோகஸ்தரே ஒருவரே முன்வந்து கட்டணம் செலுத்தி, அந்த படம் பொறித்த அஞ்சல் அட்டைகள் லட்சக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார். அது போலவே இதற்கும் செய்யலாம். அதற்கு ஏதுவாக முகாம் ஏற்படுத்துமாறு தமிழ்நாடு மாநில தபால் துறை தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளேன். இதை ரஜினி ரசிகர்களும், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ஏன் ரஜினியே கூட அதிகாரிகளிடம் வேண்டுகோளாக முன்மொழிந்தால் நன்றாக இருக்கும். அது தபால் துறைக்கு வருமானம் அதிகரிக்கும். இந்த திட்டத்திற்கு இது ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கும்!’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x