Last Updated : 16 Aug, 2016 02:45 PM

 

Published : 16 Aug 2016 02:45 PM
Last Updated : 16 Aug 2016 02:45 PM

வரலாற்றை அறிந்துகொள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது அவசியம்: தொல்லியல் அறிஞர் கருத்து

கல்வெட்டுகள் என்பவை வரலாற்று தொன்மையின் அசல் சாட்சியங்கள். நாடு முழுவதும் கண்டெடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளை பாதுகாப்பது சவாலான பணி.

இதுகுறித்து தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் கூறி யதாவது: கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை எப்படியாவது தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் செங்கல், களிமண், சுண்ணாம்பை தேய்த்து படிக்க முயல்கின்றனர். இதனால், கல்வெட்டுகள் சேதம டைகின்றன. படியெடுத்தல் நேர்த்தியான கலை. 1885-ல் இருந்தே கல்வெட்டுகளை படியெ டுக்கும் முறை, இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. கல் வெட்டுகளை படியெடுக்கத் திட்ட மிடும்போது அதிலுள்ள எண்ணெய் பசை, சுண்ணாம்பை தண்ணீரால் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். கல்வெட்டின் அளவைப் பொறுத்து தண்ணீரில் நனைத்த சற்று தடிமனான வெள்ளைத்தாள்களை கல்வெட்டின் மேல் பரப்ப வேண்டும். பின்னர் தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட 'பீட்டிங் பிரஷ்' கொண்டு வெள்ளைத்தாளின் மேல் நன்றாக தட்ட வேண்டும்.

அந்த தாளின் மீது தண்ணீரில் நனைக்கப்பட்ட மேலும் சில தாள்களை மூடி மீண்டும் அதேபோல செய்ய வேண்டும். கருப்பு மை மற்றும் டேபர் எனப்படும் மையொற்றி ஆகிய இரண்டு பொருட்கள் மிக அவசியமானவை. ஐவரி பிளாக், லேம் பிளாக் போன்ற கருப்பு மைகளை சம அளவில் கலந்து, பிசின் (கோந்து) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை சேர்த்து தாளின் மேல் பரப்பப்படும் கருப்பு மையை நாமே தயாரித்துக் கொள்ளலாம். மையொற்றியின் மூலம் கருப்பு மையைத் தடவி எடுத்து கல்வெட்டின் மீது வைக்கப்பட்டுள்ள தாளில் ஒற்றி யெடுக்க வேண்டும்.

மையொற்றியால் கருப்பு மையை தாளில் ஒற்றியெடுக்கும் போது, பள்ளங்களைச் சுற்றி யுள்ள மேடான பகுதியில் மட் டுமே மை பரவும். நன்றாகக் காய்ந்தபின், கல்வெட்டில் ஒட் டியுள்ள தாளை கிழியாமல் அப்படியே எடுத்துப் பார்த்தால் கருப்பான இடங்களுக்கு நடுவே கல்வெட்டில் உள்ள எழுத்துகள் வெள்ளையாகத் தெரியும். இந்த முறையில் படியெடுப்பதால் கல்வெட்டுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அதுமட்டுமின்றி தாளில் தெளிவாகத் தெரியும் எழுத்துகளை பல்லாண்டுகளுக்கு பாதுகாப்பாக வைத்திருந்து எப் போது வேண்டுமானாலும் வாசி க்கலாம்.

படியெடுக்கப்பட்ட தாள்களை மடித்து, அதன் பின்புறம் கல்வெட்டு கிடைத்த ஊர், நாள், நேரம், அந்த கல்வெட்டில் உள்ள விவரங்கள், படியெடுத்த அலுவலரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதி கையொப்பமிட்டு தொல்லியல் துறை நூலகம் அல்லது ஆவணக் காப்பகத்தில் வழங்க வேண்டும். கல்வெட்டில் உள்ள எழுத்துகள் குறித்து மீள் ஆய்வு செய்ய இந்த தாள்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

படியெடுக்கும் முறையில் மையொற்றுதலில் சிறிய தவறு நேர்ந்தாலும் கூட எழுத்துகள் பிழையாக வாய்ப்பிருப்பதால் தொல்லியல் துறை சார்ந்த அலு வலர்களின் உதவி மிக முக்கி யமானது. ஊட்டி, மைசூரில் உள்ள மத்திய அரசின் தொல்லியல் துறை அலுவலகத்தில் கூட, தமிழ்நாட்டில் ஆய்வு செய்யப்பட்ட கல்வெட்டுகளின் படித்தாள்கள் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகிறது. தற் போது தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட காரணத்தால், டிஜிட்டல் முறையிலும் கல் வெட் டுகளை துல்லியமான முறையில் நிழற்படமெடுத்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது. முந்து தமிழ் (தமிழ் பிராமி), வட்டெழுத்து, பிந்தைய தமிழ், கிரந்தம், அசோகன் பிராமி எழுத்துகளும் இதேபோன்ற முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, பழங்கால கல்வெட்டுகளை பாதுகாத்து அதிலுள்ள தகவல்களை துல்லியமாக நகலெடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x