Published : 25 Jan 2017 02:16 PM
Last Updated : 25 Jan 2017 02:16 PM
தன்னை மகன் என உரிமை கோரி, மாத பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதிமன்றத்தில் வயதான தம்பதி தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு வழக்கு தொடர்ந்த தம்பதி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55) ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்களின் மூத்த மகன் கலைசெல்வன், திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்குச் சென்றார்.
அதன் பிறகு அவர் திரும்பிவரவில்லை. பிரபல நடிகர் தனுஷ் தான் எங்கள் மகன் கலைசெல்வன். சினிமாவில் சேர்ந்த பிறகு தனது பெயரை தனுஷ் கே.ராஜா என மாற்றிக்கொண்டார். அவர் ஆண்டுக்கு ரூ.நூறு கோடி சம்பாதிக்கிறார்.
மகன் சினிமாவில் பெரிய நடிகராக இருந்த போதிலும் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். வயதான பெற்றோரை கவனிக்க வேண்டியது மகனின் கடமை. அந்த வகையில் எங்களுக்கு மாதம் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, உணவு செலவு என மொத்தம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த டிச. 25-ல் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 12ம் தேதி நடிகர் தனுஷ் ஆஜராக நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
ஜன. 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை மார்ச் 3-ம் தேதி நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கூறியிருப்பது அனைத்தும் தவறானது. எனவே அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தனுஷின் மனுவுக்கு கதிரேசன், மீனாட்சி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப். 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT