Last Updated : 11 Mar, 2017 09:18 AM

 

Published : 11 Mar 2017 09:18 AM
Last Updated : 11 Mar 2017 09:18 AM

பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 துணை வங்கிகளை இணைப்பது சரியா? - தொழிற்சங்க நிர்வாகிகள் கருத்து

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா ஆகிய 5 துணை வங்கி களை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி இது அமலுக்கு வருகிறது.

இந்த இணைப்பு நடவடிக்கையின் சாதக, பாதகங்கள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அகில இந்திய வங்கி ஊழியர் கள் சம்மேளனத்தின் பொதுச் செய லாளர் சி.எச்.வெங்கடாச்சலம்:

இணைப்பு நடவடிக்கையால் வங்கிக் கிளைகள் மூடப்படும். இதனால், ஏற்கெனவே அங்கு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார் கள். தற்போது, கிளை வங்கிகளில் சிறிய வியாபாரிகள், பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். வங்கியை இணைத்த பிறகு, பாரத ஸ்டேட் வங்கி மிகப் பெரிய வங்கியாக மாறும். இதனால், அதிக அளவில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனால், சிறு வியாபாரிகள், சாதாரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.

கிளைகள் மூடப்படுதல், ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் பணி பாதுகாப்பின்மை, பணியிடமாற்றம், பதவி உயர்வு இல்லாமை போன்ற வகைகளில் ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும்.விஆர்எஸ் மூலம் வேலை இழக்கும் அபாயமும் உண்டு.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ:

துணை வங்கிகள் இணைக்கப்படுவதில், பாதகங்களைவிட சாதகங்கள் அதிகம் உள்ளன. துணை வங்கிகளிடம் பல நிறுவனங்கள் கடன் பெற்றிருக்கும். அவ்வாறு கடன் பெற்றவர்களும் தற்போது ஒருங்கிணைந்த ஸ்டேட் வங்கியின் கீழ் வருவதால், வர்த்தக வட்டாரத்தில் அந்த நிறுவனங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மேலும், இது பெரிய வங்கி என்பதால் உயர் தொழில்நுட்பம், அனுபவமிக்க ஊழியர்கள், பயிற்சி மையங்கள் ஆகிய வற்றைக் கொண்டிருக்கும். தவிர, இணைப்பு நடவடிக்கையால் வங்கிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு மேலும் தரமான சேவை கிடைக்கும்.

பாதிப்பும் சற்று இருக்கவே செய்யும். முன்பு, சிறிய கிளையாக இருக்கும் போது, குறைந்த வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அதனால், அக்கறை யுடனான சேவை கிடைத்திருக்கும். தற்போது, பெரிய வங்கியுடன் இணைப்ப தால், அதுபோன்ற தனிப்பட்ட அக்கறை யிலான சேவை கிடைப்பதில் சற்று குறைபாடு ஏற்படலாம்.

பல கிளைகள் மூடப்படும் என்ற அச்சமும் அநாவசியமானது. ஸ்டேட் வங்கி மற்றும் துணை வங்கிகளின் கிளைகள் அதிக அளவில் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே அவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர, பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகிறது. வங்கி நிர்வாகம் - ஊழியர் சங்கம் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் இப்பிரச் சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நேற்றுகூட மும்பையில் நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா 2008-ம் ஆண்டும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் 2010-ம் ஆண்டும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x