Published : 29 Oct 2014 08:51 AM
Last Updated : 29 Oct 2014 08:51 AM

டாஸ்மாக் முறைகேடுகளை கண்டுபிடிக்க கடைகள், பார்களில் ரெய்டு நடத்த 3 தனிப்படைகள்

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சாதாரண நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய்க்கு தினமும் மதுவகைகள் விற்பனையாகும். பண்டிகை நாட்களில் சுமார் 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை, மது வகைகள் விற்பனையாகும். 2013-ம் ஆண்டில் அதிகபட்சமாக தீபாவளி நாளில் மாநிலம் முழுவதும், 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.125 கோடிக்குதான் மது விற்பனை நடந்துள்ளது.

இதனால் டாஸ்மாக் நிர்வாகம், அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி விற்பனைக் குறைவுக்கான காரணங்களை கண்டறிய உத்தர விட்டுள்ளது.

இதில், டாஸ்மாக் பார்களில் பல இடங்களில் முறைகேடாக மது விற்பனை செய்யப்படுவதாகவும், புதுவை மற்றும் ராணுவ கேன் டீன்களில் வாங்கப்பட்ட மது, டாஸ்மாக்கை ஒட்டியிருக்கும் லைசன்ஸ் இல்லாத பார்களில் விற்கப்படுவதாகவும் அதிகாரி களுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, உள்ளூர் மற்றும் கலால் போலீஸார் மூலம் உண்மை கண்டறிய உத்தரவிடப்பட் டுள்ளது.

இதற்கிடையில், டாஸ்மாக் நிர்வா கத்திலிருந்து மாவட்ட மேலா ளர்கள் தலைமையிலான தனிப்படை, டாஸ் மாக் கடைகள் மற்றும் பார்களில் ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டலம் வாரியாக 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர், மண்டல மேலாளர்கள் உத்தரவிடும் மாவட்டத் துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்து வார்கள் என்று டாஸ்மாக் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எங்கள் தனிப்படையினர் யாருக்கும் தகவல் தராமல், திடீரென்று வெளி மாவட்டங்களில் ஆய்வு செய்வர். டாஸ்மாக் மது கிடங்குகள், மது வகைகளை விநியோகம் செய்யும் தனியார் ஒப்பந்த லாரிகள், மதுக்கடைகள் மற்றும் பார்களில் இவர்கள் ரெய்டு நடத்துவார்கள். ஒரிஜினல் மதுவில் தண்ணீர் மற்றும் அனுமதியில்லாத மது வகைகள் கலக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அவற்றை சாம்பிள் எடுத்து வந்து பரிசோதனை செய்ய உள்ளோம்.

கடைகளில் முன்னறிவிப்பில் லாமல் ஆய்வு செய்து, மது இருப்பு, விற்பனை, பண இருப்பை ஆய்வு செய்து, அவற்றை டாஸ்மாக் கடைகளின் புத்தகக் கணக்குடன் சரிபார்க்க உள்ளோம்.

மேலும், பார்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட பின்பு, போலி மது விற்பதாக புகார்கள் வருகின்றன. இதை டாஸ்மாக் தனிப்படையும், உள்ளூர் போலீஸ் மற்றும் கலால் போலீஸும் இணைந்து, இரவு மற்றும் அதிகாலை நேர சோதனை நடத்தவுள்ளோம்.

இதன்மூலம் டாஸ்மாக் பார்களில் போலி மது அல்லது அனுமதியில்லாத மது வகைகளின் விற்பனையை தடுக்க முடியும். இதன் மூலம் சரிந்த விற்பனையை மீண்டும் வழக்கமான நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x