Published : 25 Mar 2017 07:15 PM
Last Updated : 25 Mar 2017 07:15 PM
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கல் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சனிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், பாக்ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பினை மேற்கொள்ள ஊக்குவித்திடவும், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ.1520 கோடி சிறப்பு நிதியுதவி கோரியிருந்தது.
இந்த நிதியில் கோரப்பட்டிருந்த உட்கட்டமைப்பு வசதிகளின் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராம மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ள ஏதுவாக மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்காக ரூ.113.90 கோடி மத்திய அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ராமேசுவரம் பகுதியில் பாக்ஜலசந்தியில் மீன்பிடி விசைப்படகுகளின் நெரிசலைக் குறைக்க பாம்பன் குந்துக்கல் பகுதியில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் பாம்பனில் கூறியதாவது,
''ராமேசுவரம் தீவு பாம்பன் அருகே குந்துகால் கடற்கரையில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட்டால் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.
குந்துகாலில் அமையவுள்ள துறைமுகம் ரூ.60 கோடியில் அமைக்கப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் துறைமுகம் அமைக்கும் பணிகள் விரைவாக துவங்கும். மேலும் 170 படகுகளின் உரிமையாளர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்கும் படகுகள் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது'' என்றார்.
ஆய்வின்போது மீன்துறை கூடுதல் இயக்குநர் மோகனசுந்தரம், மீன்பிடித் சங்க பிரநிதிகள் அருளானந்தம், போஸ், தேவதாஸ், சேசு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT