Published : 22 Jun 2016 01:07 PM
Last Updated : 22 Jun 2016 01:07 PM
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், கடும் வெயில் மற்றும் மழைக் காலங்களில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
வெளிச் சந்தையில் நிலவும் கூடுதல் விலை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால், அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கிலும் தொடங்கப்பட்டதுதான் ரேஷன் கடைகள்.
இந்தக் கடைகள் மூலம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1.98 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க 33,222 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கடைகளுக்கு சொந்தக் கட்டிடம் கிடையாது. பல கடைகள் மிகச் சிறிய இடத்தில், வாடகைக் கட்டிடங்களில், மழை பெய்தால் ஒழுகும் நிலையில்தான் தற்போதும் செயல்பட்டு வருகின்றன.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில்கூட பொருட்களை வைப்பதற்கோ, அங்கு பணியாற்றும் விற்பனையாளர் மற்றும் எடை போடுபவர் நிற்பதற்கோ இடமில்லாத சூழல்தான் உள்ளது.
மாதம் முழுவதும் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க, பெண்களும், முதியோருமே அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கு வருகின்றனர். ஒரு கடையில் குறைந்தபட்சம் 1,000 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், பொருட்கள் வாங்க வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடைகளில் எவ்வித வசதியும் இல்லாத நிலைதான் நீடிக்கிறது.
கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடைக்கு முன் நீண்டவரிசையில் காத்திருந்துதான் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. இதனால், பெண்களும், முதியோரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பொருட்களை உரிய காலத்தில் வாங்காவிட்டால், பின்னர் கிடைக்காது என்பதால், வெயில், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து, அவதிப்படுகின்றனர். சில கடைகளில், விற்பனையாளர்களின் சொந்த முயற்சியால் கடையின் முன்புறம் கீற்றுக் கூரைகள் வேயப்பட்டுள்ளன. இருப்பினும், அங்கு காத்திருக்கும் மக்களுக்கு குடிநீர், பணியாளர்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்டவைகூட கிடையாது என்பது அவலத்தின் உச்சம்.
எனவே, தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT