Published : 17 Mar 2017 10:25 AM
Last Updated : 17 Mar 2017 10:25 AM

நிறைவேறுமா அவிநாசி-அத்திக்கடவு திட்டம்? - 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்



திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் மிக முக்கியக் கோரிக்கையாக, கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம்.

மூன்று மாவட்டங்களை சேர்ந்த 72 குளங்கள், 538 குட்டைகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் நீர் ஆதாரமாக இத் திட்டம் உள்ளது.

கோவை மாவட்டம் பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2000 கன அடி வெள்ள உபரி நீரை மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்புவதன் மூலம் நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்க முடியும். இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேறும். 1957-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் காமராஜரின் நண்பருமான மாரப்பகவுண்டர், சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். ஆனால், திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறக் கோரும் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 1900 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. விவசாயம் பொய்த்துபோய், தற்போது குடிநீருக்கே பெரும் திண்டாட்டம் நிலவுகிறது.

தேவை மத்திய அனுமதி

மத்திய அரசிடம் அனுமதி பெறாமால் பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் நிதி ஒதுக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு பொன்னையனும், 2011-ம் ஆண்டு கே.வி.ராமலிங்கமும் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கினார்கள். தற்போது அதிமுக அரசே 3-வது முறையாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் மூலம் மீண்டும் நிதி ஒதுக்கியுள்ளது.

முதலில் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே ஆகிய துறைகளிடம் உரிய அனுமதி பெறவேண்டும். ஆனால் மாநில அரசு அப்படி செய்யாமல் இம்முறையும் நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு நிதி ஒதுக்கும் திட்டங்கள் மூலமும் இத்திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கலாம்.

இத்திட்டம் கோரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், விவசாயம் பொய்த்துவிட்டது. கால்நடைகளை வளர்க்கமுடியாத சூழலில் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் விவசாயிகளின் வாழ்வு செழிக்கும். அதற்கான ஒரு பிரதான திட்டமே இது. கடந்த காலங்களில் கடும் வறட்சியை தாங்கமுடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்கின்றனர் இப்பகுதிகளைச் சேர்ந்தோர்.

கண்காணிப்புக் குழு

அவிநாசி- அத்திக்கடவு போராட்டக்குழு கூட்டமைப்பை சேர்ந்த மா. வேலுச்சாமி கூறியதாவது:

போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் உதயமானால் அதற்கு தனி அலுவலர் நியமிக்கப்படுவது போல் இத்திட்டத்துக்கும் ஐஏஎஸ்., அளவிலான அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். திட்டத்தை அமல்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மூத்த பொறியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினர் ஆகியோர் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற வேண்டும். திட்டத்தை நிறைவேற்ற மிகக்குறைந்த மதிப்பீட்டான, ரூ. 800 கோடியில் முன்வரைவு அளித்தோம். திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு முன்வரைவுகள் உள்ளதால், எந்த அடிப்படையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

முதல்வருடன் சந்திப்பு

போராட்டக்குழு கூட்டமைப்பை சேர்ந்த தெ.பிரபாகரன் கூறியதாவது: 60 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த சிறிய ஆறுதல் இது. திட்டப் பணிகள் தொடங்குவது குறித்த தெளிவான திட்டம் இல்லை. மேலும் கடந்த கால ஏமாற்றங்கள்போல், தற்போதும் நிகழ்ந்துவிடக்கூடாது. திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக 3 மாத காலத்துக்குள் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்றால் வலுவான போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்போம்.

போராட்டக்குழு கூட்டமைப்பு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓரிரு நாட்களுக்குள் சந்தித்து, திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்த நேரம் கேட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x