Published : 31 Oct 2014 02:33 PM
Last Updated : 31 Oct 2014 02:33 PM
சர்வதேச கோடைவாசஸ்தலமான கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையில் 7,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கொடைக்கானல் மலை 3,800 ஆண்டுகளுக்கு முன்புவியியல் பரிணாம மாற்றத்தால் உருவானதாக புவிஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1844-ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை கண்டுபிடித்தனர். இங்கு இங்கிலாந்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை காணப்பட்டதால், விடுமுறைக் காலத்தில் ஓய்வெடுக்க 1848-ம் ஆண்டு தற்போதைய கொடைக்கானல் ஏரி அருகே இரண்டு பங்களாக்களை கட்டி குடியேறியுள் ளனர். 1875-ம் ஆண்டுவரை, கொடைக்கானல் மலையில் ஓய் வெடுக்க வரும் ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களது குடும்பத் தினர், பளியன் என்ற ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட 500 மக்களே வசித்தனர். 1914-க்குப் பின், கொடைக்கானலுக்கு ஆங்கிலேயர் தார் சாலை அமைத்தனர். அதன்பிறகு ஐரோப்பியர்கள், இந்தியர்களையும் சேர்த்து சுமார் 2000 பேர் தான் கொடைக்கானலில் வசித்தனர்.
இந்நிலையில் தற்போது, கொடைக்கானல் மலையில் நகராட்சி டவுன், மலைக்கிராமங்களையும் சேர்த்து மொத்தம் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டிடங்கள், வாகனப் போக்குவரத்தால் கொடைக்கானல் மலையில் பாரம் மிகுதியாகி விட்டதால் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் உருவாக்கிய பாரம்பரியமிக்க கொடைக்கானல் மலைச்சாலை, தற்போது பெய்த பருவமழையில் நிலச்சரிவு, மண் அரிப்பு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.
சாலை உருவான வரலாறு
இதுகுறித்து கொடைக்கானல் ‘எபக்ட் கோடை’ அமைப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் வீரா ‘தி இந்து’ விடம் கூறியது: சென்னை மாநில ஆளுநராக இருந்த லார்டு டென்டன்ட்,‘மெட்ராஸ் ஸ்டாப் கார்ப்பரேசன்’ பொறியாளர்களை அழைத்துவந்து ஆய்வு செய்து, 1875-ம் ஆண்டு கொடைக்கானலில் 55 கி.மீ. தூரத் துக்கு மலையைக் குடைந்து ‘கூலி காட் ரோடு’ என்ற மண் சாலையை அமைக்கத் தொடங்கினார். 1878-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றபின், அந்த சாலை முழுமை அடைய வில்லை. அதன்பின், 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், ஓய்வு பெற்ற லார்டு டென்டன்ட்டையே அழைத்துவந்து, கொடைக்கானலில் ஊத்து என்ற பகுதியில் இருந்து அடிவாரம் வரை 11 கி.மீ. தூரத்துக்கு ‘பிளாக் டாப்ட்’ என்ற ஒருவகை தார் சாலையை அமைத்தனர்.
கழிவு கருங்கல், குரூட் ஆயில் (கச்சா எண்ணெய்) மற்றும் ஆற்று மணலைக் கொண்டு இந்த சாலையை அமைத்தனர். இரண்டாம் கட்டமாக 1916-ம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு ஊத்து அருகே வாலகிரியில் இருந்து கொடைக்கானல் டவுன் வரை 43 கி.மீ. தூரத்துக்கு தார் சாலை அமைத்தனர். அடிவாரத்தில் இருந்து கொடைக்கானல் வரை 27 இடங்களில் ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் இருந்து மழைநீர் சாலையில் கொட்டாமல் சாலையின் அடியில் செல்ல பாலங்கள் அமைத்தனர். ஏழு இடங்களில் இந்த சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு இடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைத்து அந்த துறை அலுவலர்கள் மண் சரிவு, மரம், பாறைகள் விழாமல் தடுக்கவும், விழுந்தால் அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.
காலப்போக்கில் இந்த சாலையை இந்தியர்கள் அகலப்படுத்தினாலும், ஆங்கிலேயர் கால கண்காணிப்பு, பராமரிப்பு இல்லை. தற்போது இந்தச் சாலை உருவாகி 100 ஆண்டுகள்
கடந்துவிட்டது. இந்த சாலைக்குநூற்றாண்டு விழா எடுக்க வேண்டிய நேரத்தில், சாலையை நெடுஞ் சாலைத்துறை பராமரிக்காமல், கண்காணிக்காமல் விட்டதால் இன்று நிலச்சரிவால் மூடப்பட்டது வேதனை அளிக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT