Last Updated : 03 Aug, 2016 01:03 PM

 

Published : 03 Aug 2016 01:03 PM
Last Updated : 03 Aug 2016 01:03 PM

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்த 2,000 கிலோ ஆடைகள்: நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுமா?

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று ஒரே நாளில், சுமார் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஆடைகள் பக்தர்களால் ஆற்றில் விடப்பட்டன.

ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை என இரண்டு நிகழ்வுகளும் நேற்று ஒரே நாளில் வந்ததால், ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட காவிரிப் படித்துறைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

அம்மா மண்டபம் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களில் பெரும்பாலானோர் புனித நீராடிவிட்டு தாங்கள் உடுத்தியிருந்த பழைய ஆடைகளை ஆற்றில் விட்டுச் சென்றனர். இவ்வாறு ஆற்றில் விடப்பட்டு, சேகரிக்கப்பட்ட ஆடைகள் சிறிது நேரத்தில் மலைபோல குவிந்தன.

உடுத்திய ஆடைகளை விட்டுச் செல்வதற்காக படித் துறையில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சியின் இரும்புக் கூண்டுகளில் யாரும் ஆடைகளைப் போடவில்லை. இதை அங்கிருந்த மாநகராட்சி அலுவலர்களும் கண்டுகொள்ள வில்லை. இதன்மூலம், நீர்நிலை கள் மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற் றுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவிச் செயற்பொறியாளர் பாலசுப்பிர மணியனிடம் கேட்டபோது, “ஆற்றில் பாலித்தீன் பைகளையோ, ஆடைகளையோ விடக் கூடாது என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகை வைத்துள்ளோம். மேலும், ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது. அதையும் மீறி, ஐதீகம் என்ற பெயரில் ஆற்றில் ஆடைகளை விட்டால் என்ன செய்ய முடியும்? ஆறு மாசடைவதைத் தடுப்பதில் தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவரும், அகில பாரத துறவியர்கள் சங்க அமைப்புச் செயலாளருமான சுவாமி ராமானாந்தா கூறியபோது, “உடுத்திய ஆடைகளை ஆற்றில் விட வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திரமும் கூறவில்லை. குறிப்பாக, நதிக் கரையில் ரிஷிகள் தவம் செய்வதாக ஐதீகம். எனவே, நதியில் மட்டுமல்லாமல், நதியின் கரையிலும் உடுத்திய ஆடைகளை போடக்கூடாது.

பக்தி, ஆன்மிகம் என்ற பெயரில் ஆடைகளை நீர்நிலைகளில் விடுவது மிகப் பெரிய தவறு. இந்தச் செயல், நீர்நிலைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம். இந்த விஷயத்தில் துறவிகள், ஜோதிடர்கள், சடங்கு செய்விப்போர் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடாது.

ஆடைகளை விடுவதால் எந்தப் பலனும் ஏற்படாது. எனவே, ஆற்றில் ஆடைகளை விடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். நீர்நிலைகளைக் காப்பதில் தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்” என்றார்.

மறுவிற்பனையாகும் ஆடைகள்

காவிரியில் பொதுமக்கள் விடும் ஆடைகளை, சிலர் சேகரித்து கரையில் குவித்துவைத்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் பேசியபோது, “ஆற்றில் விடப்படும் ஆடைகளைச் சேகரித்து, உலரவைத்து எடைக்கு விற்று விடுவோம். நல்ல- புதிய ஆடைகள் கிலோ ரூ.10-க்கும், சாதாரண ஆடைகள் கிலோ ரூ.7 வரைக்கும் விலை போகும். இவை, பின்னர் மறுவிற்பனையாகவும் வாய்ப்புள்ளது. அதேவேளையில், நைந்துபோன பழைய ஆடைகளைச் சேகரிப்பதில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x