Published : 17 Feb 2014 09:20 AM
Last Updated : 17 Feb 2014 09:20 AM
தமிழகத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க. அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சேலத்தில் ம.தி.மு.க. நிர் வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 578 தமிழக மீனவர்களைச் சிங்களர்கள் கொன்று குவித்துள்ளனர். இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் பல லட்சம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி. உலக அளவில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வரும் 26-ம் தேதி இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என அடுக்கடுக்காய் ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
தமிழகத்தில் நரேந்திரமோடி அலை வீசுகிறது. அவர் நியாயமான அரசியல்வாதி என்பதால் மத்தியில் நல்ல ஆட்சியை அளிப்பார். குஜராத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய நரேந்திர மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார்.
தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் உருவெடுக்கும். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பொதுக்குழுவில் கூடி முடிவெடுப்பதன் மூலமே தெரியவரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT