Published : 28 May 2017 01:20 PM
Last Updated : 28 May 2017 01:20 PM

தமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சம் தீரும்: நவீன நீர்வழிச்சாலைத் திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ் யோசனை

நவீன நீர் வழிச்சாலைத் திட்டத்தில் தமிழகத்தின் 17 ஆறுகளை இணைத்தால் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கலாம் என நவீன நீர்வழிச் சாலை திட்டப் பொறியாளர் ஏ.சி. காமராஜ் யோசனை தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: காவிரி பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் விவசாயி கள் தண்ணீரின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளாவதோடு, பல விவசாயிகள் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி தண்ணீரை கர்நாடகாவிடம் சண்டை யிட்டு பெற வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் 192 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 60 டி.எம்.சி தண்ணீரே கிடைத்தது. தங்கள் மாநிலத்திலேயே வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. ஆனால், நாமோ ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தில் இருந்து கடலுக்கு அனுப்பி விட்டு தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறோம். (பொதுப்பணித் துறையின் புள்ளி விவரம்). கடந்த ஆண்டு மதுராந்தகம், பாலாறு, வைகை ஆறுகளில் இருந்து 30 முதல் 40 நாட்கள் உபரிநீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது.

இதற்கெல்லாம், தீர்வாகக் கொடுக்கப்பட்டதுதான் தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டம். இது தமிழகத்தின் 17 முக்கிய ஆறுகளை இணைக்கிறது. இதன் மூலம் கடலில் சென்று கலக்கும் 177 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி தேவையான பகுதிகளுக்கு தேவையான நேரத்தில் வழங்க முடியும். இது மிகப்பெரிய மழைநீர் சேமிப்புத் திட்டமாகும்.

இதனால் தங்கு தடையற்ற குடிநீர் கிடைக்கும். பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும், வெள்ளச் சேதம், லாரியின் மூலம் குடிநீர் விநியோகம் போன்ற செலவுகள் குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி அளவுக்கு மின்சாரம் மிச்சமாகும். இன்று தமிழகம் முழுவதும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். நடுத்தர மக்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 2000-ல் இருந்து ரூ. 3000 வரை குடிநீருக்காக செலவு செய்கிறார்கள். பல இடங்களில் லாரிகள் மூலமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

திட்டத்தின் மதிப்பு ரூ.50,000 கோடி மட்டுமே. ஆனால், அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதற்கு தமிழக அரசு ஆய்விற்கு மட்டும் செலவு செய்தால் போதும். மத்திய அரசு திட்டத்திற்கான செலவில் 60% வழங்கிவிடும். தனியார் முதலீட்டாளர்கள் மீதமுள்ள 40 சதவீதத்தை முதலீடு செய்ய முன்வருவர். திட்டம் விரைந்து நிறைவேறும். மேலும் ஆந்திர அரசு இந்த திட்டத்துக்கு தண்ணீர் தரத் தயாராக உள்ளது. கோதாவரியில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.

எனவே தமிழகம் தண்ணீர் தேசமாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையிலும் திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x