Last Updated : 04 Nov, 2014 08:19 AM

 

Published : 04 Nov 2014 08:19 AM
Last Updated : 04 Nov 2014 08:19 AM

தந்தை மூப்பனார் வழியில் தனிக்கட்சி.. சாதிப்பாரா ஜி.கே.வாசன்?

தனிக்கட்சி தொடங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனது தந்தையைப்போல சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தந்தையைப் போலவே, காங்கிரஸ் தலைமையுடன் முறுக்கிக் கொண்டு தனிக்கட்சி தொடங்கியுள்ளார் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன். ஆனால், மூப்பனார் கட்சி தொடங்கியபோது இருந்த சூழல், தொண்டர்களின் மனநிலை எதுவும் இப்போது இல்லை. தமிழக மக்களிடம் கடும் வெறுப்பை சம்பாதித்திருந்த அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று தமிழக காங்கிரஸார் வலியுறுத்தியும் கட்சித் தலைமை அதை கேட்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார் மூப்பனார்.

அவருடன் ப.சிதம்பரம், அருணாசலம், பாரமலை, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், டி.யசோதா, என்.எஸ்.வி.சித்தன், ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் மூப்பனாரின் புதிய கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கூட்டணியில் சேர்த்து 40 தொகுதிகளை கொடுத்தது திமுக. இப்படி பலமான அஸ்திவாரத்துடன் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், மக்களின் செல்வாக்கை பெற்று தேர்தலில் வெற்றி கண்டது.

ஆனால், இப்போது அதுபோன்ற சூழல் எதுவும் இல்லாத நிலையில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வாசன். ‘இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்ததால்தான் தமிழகத்தில் காங்கிரஸை மக்கள் தூக்கி எறிந்தனர். அதனோடு சேர்ந்த திமுகவையும் வீழ்த்தினர். காங்கிரஸ் மீது மக்களுக்கு கொதிப்பு இருந்த அந்த நேரத்தில், இப்படியொரு முடிவை வாசன் எடுத்திருந்தால், மீண்டும் 1996 வரலாறு திரும்பியிருக்கும். அப்போதெல்லாம் காங்கிரஸில் இருந்து மந்திரி பதவியை அனுபவித்துவிட்டு, இப்போது தனிக்கட்சி தொடங்கியிருக்கும் அவர், தந்தையைப்போல வெற்றி பெறுவாரா?’ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.

இதுகுறித்து வாசனின் ஆதரவாளரான சீனியர் தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பு எங்களிடம் பேசிய வாசன், ‘கட்சியை வலுப்படுத்த ஒற்றுமை என்பது முக்கியமான விஷயம். இங்கே கோஷ்டி பிரச்சினைகள் எதுவும் கிடையாது. எல்லோரும் கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்த வேண்டும். மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது, அவர் தலைவராக நடந்து கொள்ளவில்லை. ஒரு குடும்பத் தலைவர் போலவே நடந்து கொண்டார். அவரது வழியை பின்பற்றி நடப்பேன். நிர்வாகிகள், என்னை பார்ப்பதற்காக சென்னையிலேயே முகாமிட்டிருக்காமல் நகரம், கிராமம் வரை சென்று கட்சியை பலப்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும்’ என கூறினார்.

புதுக்கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் பெயரையே வைக்கலாம் என்று ஒரு தரப்பினரும் மூப்பனார் காங்கிரஸ் அல்லது காமராஜர் காங்கிரஸ் என வைக்கலாம் என்று வேறு சிலரும் வலியுறுத்தி உள்ளனர். இதுபற்றி மூத்த தலைவர்களுடன் வாசன் ஆலோசித்து முடிவு எடுப்பார். கட்சிக் கொடியில் சைக்கிள் சின்னம் வேண்டும் என்று கூறினர். ஒருவேளை தேர்தல் கமிஷன் வேறு சின்னத்தை ஒதுக்கினால் சிக்கலாகிவிடும் என்பதால், கொடி வடிவமைப்பு குறித்தும் ஆலோசனை நடக்கிறது. கட்சி மற்றும் கொடி அறிமுக கூட்டத்தை 14-ம் தேதி திருச்சியில் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.

இங்கும் அங்கும்

முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூணும், எம்எல்ஏ பிரின்ஸும் நேற்று முன்தினம்வரை வாசன் அணியில் இருந்தனர். டெல்லி தலைமை நேற்று முன்தினம் இரவு பேசியதைத் தொடர்ந்து இருவரும் கடைசி நேரத்தில் காங்கிரஸிலேயே தங்கிவிட்டனர். அதே நேரத்தில், காங்கிரஸ் முகாமில் இருந்த பீட்டர் அல்போன்ஸ், வாசனின் கட்டாய அழைப்பின் பேரில் திடீரென அவரது அணிக்கு வந்துவிட்டார். காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலர் வாசன் கட்சிக்கு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x