Published : 27 Aug 2016 10:22 AM
Last Updated : 27 Aug 2016 10:22 AM
அழிவு நிலையில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்கவும், ஏரி யின் கரையைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் விதைத்தனர்.
தமிழக அரசின் மாநில மரமான பனை மரம் கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம் மற்றும் பதநீர் மூலம் உருவாகும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை மக்க ளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுப் பொருட்களாக உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 1980-களில் பனை மரத்தொழிலை சார்ந்து 5 லட்சத்துக்கும் அதிக மானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், பனை மரத்தின் மதிப்பை நாம் மதிக்காமல் போன தால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு இரையாக்கப்பட்டன. இதனால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது.
தற்போது, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை வளர்க்க வேண்டும், இருக்கின்ற மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராமன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தியாக னூர் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகளைக் குழி தோண்டி விதைத்தனர். இப்பணியில் மாண வர்களுடன் ஆசிரியர்கள் மணி, ஆனந்தபாபு, பிரகாஷ், யுவராஜ் ஆகியோரும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சிவராமன் கூறியதாவது:
இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன. தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடு கட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்கு தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
எனவே, பனை மரம் வளர்ப்பில் வருங்கால சந்ததிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் பள்ளிக்கு வரும்போது கிடைக்கும் பனை மர விதைகளை மாணவ, மாணவிகள் கொண்டு வர கேட்டிருந்தோம். இதன்படி சில மாதங்களாக சுமார் 5 ஆயிரம் பனை மர விதைகளைச் சேகரித்தோம்.
தியாகனூர் ஏரிக்கரை நெடுக, மொத்த விதைகளையும் மாணவர்கள் உதவியுடன் குழி தோண்டி விதைப்பு செய்தோம். இதன்மூலம் ஏரிக்கரையும் பலப் படும்.
மேலும், கடந்த 2 ஆண்டு களாக பல்வேறு மரக்கன்றுகளை மாணவர்கள் மூலம் பொது இடங் களில் நட்டு வைத்தோம். மரம் நடுதல் மூலம் மாணவர்களுக்கும் எங்களுக்கும் மன திருப்தி கிடைத் தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT