தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திட்டமிட்டபடி, உறுதியாக நவ.8-ம் தேதி திறக்கப்படும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: "இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் நடந்த போரில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழர்கள் 1.40 லட்சம் பேர் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதை, இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாமல், வருங்கால தமிழினமும் மறக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
முத்துக்குமார் உள்ளிட்டோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மாவீரர் மணிமண்டபமும், மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள், இலங்கையில் மண் மீட்பு போரில் உயிர் நீத்தவர்களின் படங்கள், 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் தமிழுக்குத் தொண்டுபுரிந்த எழுத்தாளர்கள், கலைஞர்களின் படங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் நவ.8-ம் தேதி மாலை 5 மணிக்கு திட்டமிட்டப்படி உறுதியாக, நிச்சயமாகத் திறக்கப்படும்" என்றார் நெடுமாறன்.
முன்னதாக, திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காவல் துறைக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட கடிதத்துக்கு செவ்வாய்க்கிழமை வரை பதில் ஏதும் தரப்படவில்லை.
மேலும், இந்த நினைவு முற்றத்தின் அருகிலேயே மூன்று நாள் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்காக தீபாவளிக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு நடைபெறும் பந்தல் அமைக்கும் பணிகளை, காவல்துறையினர் தலையிட்டு நிறுத்தக் கோரியதோடு, அதற்காக பொருள்களை ஏற்றி வந்த தொழிலாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பழ. நெடுமாறன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திறப்பு விழாவுக்கு போலீஸ் அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டது.
WRITE A COMMENT