Published : 04 Dec 2013 08:03 AM
Last Updated : 04 Dec 2013 08:03 AM
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. ஆயுதம் ஏந்திய 3000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்காக தொகுதி முழுவதும் 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,190 பேரும், பெண் வாக்காளர்கள் 1,21,094 பேரும், இதர வாக்காளர்கள் ஆறு பேர் என மொத்தம் 2,40,290 பேர் உள்ளனர்.
1400 பணியாளர்கள்
மொத்தமுள்ள 290 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 290 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர பழுது ஏற்பட்டால் பயன்படுத்த தயார் நிலையில் 35 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. முன்னதாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டது. சேலம் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் 1400 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணியாளர்களுக்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கப்பட்டு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், மற்றும் 216 வகையான பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள், ஜீப்களில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மலைப்பகுதியான குண்டூர், கொண்டையனூர், செந்திட்டு, கோவிலூர், புத்தூர் ஆகிய 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பொருட்களை காரில் எடுத்துச் சென்றனர்.
ஆயுதம் ஏந்திய போலீஸ்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதை உறுதி செய்ய 34 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு அனைத்து மையங்களிலும் தொடங்கி, மாலை 5 மணியுடன் முடிவடையும். பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய 3000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டால்..
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து இடங்களுமே பதற்றமான இடங்களாக கருதப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆயுதம் தாங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
36 மண்டலங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக காவல் துறையினர் என 3000 காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வன்முறை நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீறி கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி காலை சீல் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒருசில மணி நேரங்களில் முடிவுகள் தெரியவரும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
11 வேட்பாளர்களின் பெயர், சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 12 வது பட்டனாக நோட்டா பட்டன் பொருத்தப்படுகிறது. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், இந்த நோட்டா பட்டனை பயன்படுத்தலாம்.
அன்னியர்கள் நுழையத் தடை
ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு, தொகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு அன்னியர்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருந்த அ.தி.மு.க., - தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வெளியேறினர். மீறி யாராவது தங்கி உள்ளனரா என வீடு, பங்களா, மண்டபம், சமூக நலக்கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்காடு தொகுதியில் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொகுதிக்குள் அன்னியர்கள் உள்ளே நுழைந்து விடாமல் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT