Published : 19 Jan 2015 12:44 PM
Last Updated : 19 Jan 2015 12:44 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை மத்திய அமைச்சர் ஒருவர் நேரில் சென்று சந்தித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி "பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது" என்று கூறுவார்! இப்போது அந்தச் சொற்றொடர்தான் நினைவுக்கு வருகின்றது.
ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே, அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே மத்திய அரசின் சட்டத் துறை அமைச்சர், சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்தித்துப் பேசியதும், அதன் பின்னர் அதே அமைச்சர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த பெங்களூருக்குச் சென்றதும் பிரச்சினையாகி நாடெங்கும் விவாதப் பொருளானது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து, கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று கடுமையாக நீதிபதி தெட்சிணாமூர்த்தி தெரிவித்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், தாங்கள் வருமான வரித் துறை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு ஒன்றினை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனு நிலுவையிலே இருப்பதாகவும் தெரிவித்தார்.
18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று - அதற்காக நீதி மன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, எடுத்த இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வர வில்லை.
இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதி மன்றத்தின் பொன்னான நேரமும் செலவழிக்கப்பட்டதே, அப்போதாவது துறையின் வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம் அல்லவா? அப்போதும் அவ்வாறு செய்யவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டபோது, விசாரணை நீதி மன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த நேரத்திலாவது தாங்கள் இப்பிரச்சினையை துறைவாயிலாகத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் சொன்னார்களா என்றால் இல்லை.
இதே வருமான வரித் துறை பற்றிய வழக்கு ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.
அப்போது நீதிபதிகள் "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதி மன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?" என்றெல்லாம் கேட்டார்களே, அப்போதாவது "நாங்கள் துறை வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்போதும் சொல்லவில்லை.
ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு புதிதாக அமைந்த பிறகு, அதுவும் இந்த வருமான வரித் துறைக்கு, அருமை நண்பர் அருண் ஜெட்லி அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, டெல்லிக்குச் சென்ற ஜெயலலிதா அருண் ஜெட்லி அவர்களை நேரில் சந்தித்த பிறகு தான் அபராதத் தொகையைக் கட்டி சமரசமாகி விடுவதாகவும், வழக்கினைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார் என்றால் நடந்த நிகழ்வுகளை இணைத்து நாட்டு மக்களுக்கு நியாயமான சந்தேகம் வருமா? வராதா?
பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து, திடீரென்று சமரசம் பேச என்ன காரணம்? இதே போன்ற தவறுகளைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படப் போகிறோம் என்ற நெருக்கடியான நிலை வரும்போது, திடீரென்று நீதி மன்றத்திலே தாங்கள் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகக் கூறி, வழக்கினைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைத்தால், அரசு அதற்கு ஒப்புதல் தந்து விடுமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,
அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ? பல கோடி ரூபாய் கொள்ளை அடித்த குற்றவாளி, தான் திருடிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விடமுன் வந்து சமரசம் பேசினால் நீதி மன்றங்கள் அதை ஏற்றுக் கொள்ளுமா? நாட்டிலே நடப்பது நாடகம் போலல்லவா இருக்கிறது?
வருமான வரித் துறையிடம் ஜெயலலிதா சமாதானம் செய்து கொள்வதாக மனு செய்துள்ள நேரத்தில், அந்தத் துறையின் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்ததும், அதன் பின்னர் அந்தத் துறை வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும், தற்போது அதே மத்திய அமைச்சரே; வேறொரு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு, மேல் முறையீட்டு வழக்கு இன்னமும் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற நிலையில், குற்றவாளியின் வீட்டிற்கே சென்று சந்திப்பது என்பது முறைதானா? அதுவும் ஏடுகளில் அவர் பிரதமரின் ஒப்புதலோடு தான் சென்றதாகவும் செய்தி வந்துள்ளது.
பிரதமரும் இதற்கெல்லாம் உடந்தையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளதே? "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது?"
முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா இதே ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றது பற்றியும், அப்போது ஜெயலலிதா தன்னுடைய வருமான வரி சம்மந்தமான வழக்கு பற்றி பரிந்துரைக் கடிதம் ஒன்றைக் கொடுத்தது பற்றியும் அவர் எழுதிய நூலிலேயே குறிப்பிட்ட செய்திகள் எல்லாம் ஏடுகளில் பக்கம் பக்கமாக வந்திருக்கிறதே; இந்த நிலையில் நீதி மன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன் மேல் முறையீடு விசாரணையில் இருக்கும் ஒரு குற்றவாளியின் வீட்டுக்கு மத்திய அமைச்சர் நேரடியாகச் சென்று விட்டு, வெளியே வரும்போது, அது மரியாதைச் சந்திப்பு என்று கூறினால் "கேழ்வரகில் நெய் வடிகிறது; கேளுங்கள்" என்று கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது!
நேர்மையை நிலைநாட்டுவோம் என வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றதற்குப் பிறகு அவர்கள் அடுத்தடுத்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால், சொல்லுக்கும் - செயலுக்கும் இடையே பெருத்த வேறுபாடு தான் காணப்படுகிறது. ஜெயலலிதாவின் வருமான வரித் துறை வழக்கினைத் திரும்ப பெற்றது பற்றி நாட்டு மக்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களே இன்னும் தீராமல் இருக்கிற போது, மத்திய அமைச்சர் தற்போது ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று பேசியிருப்பது, நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட பெரியாரின் பொன்மொழியான "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்பதை மெய்ப்பிக்கும் வகையிலே அல்லவா இருக்கிறது!" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT