Published : 03 Oct 2013 12:44 PM
Last Updated : 03 Oct 2013 12:44 PM
தேர்தல்கள் துறையின் அறிவிப்பின்படி, குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வராததால், புதன்கிழமையன்று குடியிருப்போர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய வாக்காளர் சேர்ப்பு
தமிழகத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிக்காக, வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, கடந்த மாதம் 25 ம் தேதி, தமிழக தேர்தல்கள் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அக்டோபர் 2 ம் தேதி( புதன் கிழமை) மற்றும் அக்டோபர் 5-ம் தேதி ஆகிய தேதிகளில், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்கள் சரிபார்க்கப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையில் உள்ள குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோ, தேர்தல்கள் துறையின் அறிவிப்பின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் தங்கள் பகுதிக்கு புதன் கிழமை வரவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
அண்ணாநகர்கிழக்கு, ‘எல்’ பிளாக்கில் உள்ள சிவிக் எக்ஸ்னோரா வை சேர்ந்த பாலமுருகன்: "வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம் நடத்துவது என்பது நல்ல அம்சம். ஆனால், இதுகுறித்து, குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் எதுவும் கொடுக்கவும் இல்லை.
வாக்காளர் பட்டியல் எங்கள் குடியிருப்புக்கு வரவும் இல்லை. யாரை அணுகுவது என்பது குறித்து தெளிவான அறிவிப்பும் இல்லை" என்கிறார். வில்லிவாக்கம், திருநகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த மோகன் "எங்கள் பகுதியில், 450 குடியிருப்புகள் உள்ளன. ஆனால், வரைவு வாக்காளர் பட்டியல் வராததால், வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், வாக்குச் சாவடி, மண்டல அலுவலகத்துக்கு வீணாக அலைய வேண்டியுள்ளது." என்கிறார்.
அண்ணாநகர் மேற்கு, கம்பர் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த கருணாநிதி "தேர்தல்கள் துறை அறிவிப்பு பற்றி, அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அந்த அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் குடியிருப்புச் சங்க கூட்டத்தில் சரிபார்க்கப்பட்டால், அப்பட்டியலில் உள்ள குழப்பங்களை உடனே நீக்க முடியும்" என்கிறார்.
அமைந்தகரை, ஜெ.டி. துரைராஜ் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி "தேர்தல்கள் துறையின் அறிவிப்பின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வரவில்லை.
அப்படி வந்திருந்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக அமைந்திருக்கும்" என்கிறார்.
இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர்,
"குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்கள் சரிபார்க்க அக்டோபர் 2 ம் தேதி மற்றும் அக்டோபர் 5-ம் தேதி ஆகிய இரு தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வரும் அக்டோபர் 5 ம் தேதி ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT