Published : 21 Oct 2014 10:50 AM
Last Updated : 21 Oct 2014 10:50 AM
‘நியாயமா நான் செஞ்ச குற்றத்துக்கு வழக்கு போடுங்க. செய்யாத தப்புக்கெல்லாம் பொய் வழக்கு போட்டு என்கவுன்ட்டர் வரைக்கும் கொண்டுவந்து விட்டு புட்டாங்க. என்ன சுடுறத பத்தி கவலையில்லீங்க... என் மக்கா, பேரப்புள்ளைங்க காட்டு பக்கம் வரக்கூடாதுங்க, அவங்க நல்லா வளரணும், காட்டவிட்டே தொலைவா போயிடுனுங்றதுதாங்க என் ஆசை’ என கர்நாடக அதிரடிப் படையால் தேடப்படும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் பழைய கூட்டாளி ராவணன் கண்ணீர் மல்க கூறினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ராவணன், மோட்டொ ஆகியோரை கர்நாடக போலீஸார் மற்றும் அதிரடிப்படை யினர் தேடி வருகின்றனர். திராவிடர் கழக வழக்கறிஞர் அணியின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஜூலியஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த தகடூர் தமிழ்ச்செல்வன், வன்னி அரசு ஆகியோர் மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கியுள்ள ராவணன், மோட்டொ ஆகியோரைச் சந்தித்து, புகைப்படம் மற்றும் வீடியோ பேட்டியை எடுத்து வந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஓராண்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் ராவணன் அளித்த வீடியோ பேட்டி:
வீரப்பன் வழக்குல, நாலஞ்சு கேஸ் என் மேல போட்டு, தனி கோர்ட்ல கேஸ் நடந்துச்சு. இதுல ஐஞ்சு வருஷம் தண்டனை வழங்கி மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. வெளியே வந்த பிறகு, என் மேல நிறைய கேஸ் போட்டாங்க. வீரப்பன் கேசுல சேர்த்துவுட்டாங்க. இப்ப என்னாடான்னா சரவணன்னு யாரோ குட்டி வீரப்பன்னு சொல்றாங்க, அவன் செஞ்ச தப்புக்கெல்லாம் அவனோட சேர்ந்து, என் மேலே கேசு போட்டுகிட்டுருக்காங்க. நான் செஞ்ச தப்புக்கு மட்டும் கேஸ் போடுங்கன்னுதான் சொல்றேன்.
என்மேல இருக்க வழக்கெல் லாம் தமிழ்நாடு கோர்ட்ல விசாரிக் கனுங்க. நானும் மனுசுன்தாங்க. 60 வயசாயிடுச்சு. காட்டுக்குள்ள தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கு. ஏதாச்சும் வழிபண்ணுங்க... என்றபடி கண்ணீர் மல்க காட்டுக் குள் நுழைந்து மறைந்தார்.
மோட்டொ பேட்டி
மோட்டொ என்கிற சின்னப்பி வீடியோ பதிவில் கூறியிருப்பதா வது: எங்க ஊரு கத்திரி மலைக்கு பக்கத்து ஊருதான் குட்டி வீரப்பன். அவன்கூட போயி நான் எந்த தப்பு தண்டாவும் பண்ணல. ஆனா, குட்டி வீரப்பன் கேசுல என்னையும் கர்நாடக வனத்துறை சேர்த்துடுச்சு. வீரப்பன் கேசுல யானைய அடிச்சதா ஒரு வழக்கு இருக்கு. அப்பப்ப கர்நாடக பாரஸ்ட்காரங்க, செய்யாத தப்புக்கெல்லாம் கேஸ் இருக்குன்னு கூட்டிட்டுப் போயி கேஸ் போடுவாங்க.
கர்நாடகாவுல கேஸ் இருக்கற தால காட்டு வாழ்க்கையா மாறிப் போச்சு. வீடு பக்கமெல்லாம் போறது கிடையாது. காட்டுக்குள்ள வாழ முடியற வரைக்கும் வாழ வேண்டியதுதான். இப்பவே 60 வயசாயிடுச்சு. பொது மன்னிப்பு கொடுத்தாங்ன்னா ஏத்துக்கலாம். நான் வேறென்ன சொல்லுறது சாமி.... இவ்வாறாக சின்னப்பி பேசியுள்ளார்.
‘ஒளிந்து வாழக்கூடாது’
தமிழக அதிரடிப்படை எஸ்பி கருப்பசாமி கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங் கியுள்ள அளவுக்கு மோட்டொ, ராவணன் ஆகியோர் பெரிய ஆட்கள் இல்லை. இவர்கள் சாதாரண வனக் குற்றவாளிகள். வீரப்பன் கேஸில்கூட இவர்கள் இல்லை. குட்டி வீரப்பன் வழக்கில் இவர்கள் உள்ளனர். குட்டி வீரப்பனை கைது செய்த போது, இவர்களையும் பிடித்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு காட்டுக்குள் புகுந்து பதுங்கியிருக்கின்றனர்.
வழக்கு இருந்தால் நீதிமன்றத் தில் சரண் அடைய வேண்டுமே தவிர, இப்படி ஒளிந்து வாழக் கூடாது. தமிழகத்தில் இவர்கள் மீது வழக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT