Published : 05 Feb 2014 10:11 AM
Last Updated : 05 Feb 2014 10:11 AM
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணி சார்பில் ஜெயலலிதா, முலாயம் சிங், நிதிஷ்குமார் ஆகியோரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலமாக கோவை வந்த தேவகவுடா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பங்களிப்புதான் மத்தியில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும். எனவே, தேசியக் கட்சிகள், மாநில கட்சிகளின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வில்லை. சில திட்டங்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், அரசியல் தலைவர்கள் மாறி, மாறி தரக்குறைவாகப் பேசிவருவது அரசியல் நாகரீகம் அல்ல.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை.
காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று அணியின் பிரதமர் வேட்பாளராக முலாயம்சிங், நிதிஷ் குமார், ஜெயலலிதா ஆகியோரில் யார் அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தயாராக உள்ளது. டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல், கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விவாதிக்க உள்ளோம்.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமேதான் தீர்வு காணமுடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT