Published : 09 Jan 2017 08:58 AM
Last Updated : 09 Jan 2017 08:58 AM
சென்னையில் அடுத்த கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் 114 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக மாதவரத்தில் 2 லட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்டமான பணிமனை அமைகிறது.
சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானநிலையம் சின்னமலை, பரங்கிமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மெட்ரோ ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 2-வது கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட திட்டம் மாதவரம் - சிறுசேரி (மயிலாப்பூர் லஸ் வழியாக), மாதவரம் - சோழிங்கநல்லூர் (கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக), நெற்குன்றம் - வி.இல்லம் என மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்க வழிப்பாதைகள், உயர் மட்ட ரயில் பாதைகள் அமைப்ப தற்கான இடங்களை தேர்வு செய்து, வரைபடங்களையும் தயாரித் துள்ளோம். சுரங்கப் பாதைகளை விட, உயர்மட்ட பாதையில்தான் அதிக தூரம் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படும். வரும் மார்ச் மாதத்துக்குள் மாநில, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற திட்டமிட்டுள்ளோம்.
மெட்ரோ ரயில்களை பராமரிக்க தற்போது கோயம்பேட்டில் இருக்கும் பணிமனையைப் போல் மாதவரத்திலும் 2 லட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட பணிமனையை அமைக்க முடிவு செய்துள்ளோம். இங்கு 42 மெட்ரோ ரயில்களை நிறுத்தி பராமரிக்கும் வசதி உருவாக்கப்படும். பணிமனையை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள், 10-க்கும் மேற்பட்ட நடைமேடைகள் அமையும். தென்சென்னை பகுதியில் மேலும், ஒரு பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT