Published : 28 Feb 2017 10:00 AM
Last Updated : 28 Feb 2017 10:00 AM

உள்ளாட்சி: நெடுவாசலுக்கு வழிகாட்டுகிறது நியாமகிரி!

கடந்த ஆண்டு இதே நாள் நியாமகிரி பற்றி எரிந்துகொண்டிருந்தது, நெடு வாசலைபோலவே!

முந்தைய நாள்தான் பன்னாட்டு நிறுவனத்திடம் இருந்து தங்கள் மண்ணைக் காக்க போராடிய 20 வயது பழங்குடி இளைஞனைத் துணை ராணுவம் சுட்டுக் கொன்றிருந்தது. நக்சலைட் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டிருந் தார்கள். ஆனாலும், போராட்டம் கைவிடப்படவில்லை. அவர்கள் நெடு வாசலைப் போலவே தொடர் அறப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் கிராம சபைகள் மூலம் பெறப்பட்ட அரிய வெற்றிகளில் ஒன்று அது!

ஒடிசா மாநிலத்தின் ராயகாடா மற்றும் கலாஹந்தி மாவட்டங்களில் இருக்கிறது நியாமகிரி மலைத் தொடர். இந்த மண்ணின் பழங்குடியினர் ‘டங் காரியா கோந்துஸ்’சுமார் 8 ஆயிரம் பேர் இங்கிருக்கும் 105 வன கிராமங்களில் வசிக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் கிழங்கு, தேன், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்டுவாழும் விவசாயிகளுக்கும் முந்தைய தலைமுறையைச் சார்ந்த மூத்த குடிகள் இவர்கள். காட்டை காக்கும் ‘நியாம் ராஜா’ என்கிற கடவுள் மீது தீவிர நம்பிக்கைக் கொண் டவர்கள். காடு முழுவதும் கடவுள் பரவியிருப்பதாக நம்புபவர்கள்; எரிபொருள் தேவைக்காகவும்கூட பச்சை மரத்தை வெட்ட மாட்டார்கள். அதனாலேயே அடர்ந்த வனங்களும் சோலைக் காடுகளுமாக பச்சைப் பசேலென இருக்கிறது நியாமகிரி மலைத் தொடர். நூற்றுக்கணக்கான வற்றாத நீரோடைகளும் ஒடிசாவுக்கும் ஆந்திராவுக்கும் வளம் சேர்க்கும் வம்சதாரா ஆறும் இங்கே உற்பத்தி யாகின்றன.

2000- ம் ஆண்டுளின் தொடக்கத்தில் இந்த மலைத் தொடரின் உச்சியில் சுமார் 150 மில்லியன் டன் பாக்சைட் இருப்பதாகக் கண்டறிந்தது ஒடிசா மாநில கனிம வளத்துறை நிறுவனம். 2003-ம் ஆண்டு கலாஹந்தி மாவட்டம், லஞ்சிகார்க்கில் அலுமினியம் தொழிற்சாலைக்காக வேதாந்தா நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. மிகப் பெரிய அலுமினியம் சுத்தி கரிப்பு ஆலை கட்டப்பட்டது. அலுமினி யத்தை சுத்திகரிப்பதற்காக மலையைக் குடைந்து திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து பாக்சைட் வெட்டி எடுத் தார்கள். சுத்திகரிப்புக்குப் பின்பு கிடைக்கும் ரசாயனத் திடக் கழிவான சிவப்பு நிற மண் காடெங்கும் கொட் டப்பட்டது. வம்சதாரா நதி ரத்த சிவப்பாக ஓடியது. 12 வன கிராமங்கள் இதில் நேரடியாக பாதிக்கப்பட்டன. அதிர்ந்துபோன கோந்துஸ் மக்கள் அறப் போராட்டங்களில் இறங்கி னார்கள்.

சத்திய நாராயண பட்நாயக், லிங்கராஜ் ஆசாத், லாடா சிகாகா, தாதி புஷிகா, தாஷ்ரு கட்ராகா, பிரசுல் சமுத்ராயே, சித்தார்த் நாயக், தயாநிதி பிரதா உள்ளிட்ட பழங்குடியினத் தலைவர்கள் நீதிமன்றங்களில் மாநில அரசுக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந் தார்கள். 2005-ம் ஆண்டு நியாமகிரி பாதிப்புகளை ஆய்வுசெய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். சுமார் ஓராண்டு காலம் பாதிப்புகளை ஆராய்ந்த அந்தக் குழு, “மாநில சுற்றுச்சூழல் துறையும் வனத்துறையும் விதிமுறைகளை வளைத்து வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளன. இதனால், வனம் மிக மோசமாக பாதிக்கப் படுவதுடன், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள் ளன. குறிப்பாக, பழங்குடியினர் வசிக்கும் நிலத்தை பழங்குடிகள் அல்லாதவருக்கும் வேறு எந்த பயன்பாட்டுக்கும் மாற்றி வழங்க இயலாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் வழக்கில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பினார்கள் கோந்துஸ் மக்கள். ஆனால், 2009-ம் ஆண்டு தீர்ப்பு நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் பழங்குடி மக்களுக்கு எதிராகவே வந்தது.

அதிர்ந்துபோனார்கள் மக்கள். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட 12 கிராமங்களும் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது கிராம சபைக் கூட்டங்களைக் கூட்டினார்கள். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இதனை கண்காணித்து உறுதிசெய்ய அலுவலர்கள் அனுப்பப்பட்டார்கள். கிராம சபை உறுப்பினர்கள் என்கிற முறையில் கிராம மக்கள் அத்தனை பேரும் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். அத்தனை பேரும் ஒருமனதாக வேதாந்தா நிறுவனத் துக்கும் மாநில அரசுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப் பிரிவு 18-ன் கீழ் நியாமகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனம் என்றும், பட்டியல் 5-ன் கீழ் பழங்குடியினருக் கான நிலத்தை பழங்குடிகள் அல்லாதவர்களுக்கும் வேறு பயன் பாட்டுக்கும் கொடுக்க இயலாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டது. பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் கிராம சபைகளுக்கு அளித்திருக்கும் அதிகாரங்களும் தீர்மானங்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டன. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற நடவடிக்கைகள் வேகம் எடுத்ததால் அச்சமடைந்த வேதாந்தா நிறுவனம் முன்பைவிட மிக அதிகளவு பாக்சைட்டை வெட்டி எடுத்தது. 24 மணி நேரமும் சிவப்பு புழுதிக் காற்றும் வெடிச் சத்தங்களும் கானகத்தைக் கலங்கடித்தன. பழங்குடியின மக்களின் போராட்டங்களும் வலுத்தன. சிறப்பு ஆயுதப் படை சட்டத்தின் கீழ் அடக்கு முறையை ஏவியது மாநில அரசு. துணை ராணுவம் குவிக்கப்பட்டது. பழங்குடியினத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நக்சலைட் களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான ஆண்களை சிறையில் அடைத்தனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஒன்றிணைந்து வனத்தையும் மரங் களையும் சுற்றி வட்ட வடிவில் கைகோத்து நின்று போராடினர். போராட்டம் மாதக்கணக்கில் நீடித்தது. இது உலகெங்கும் உள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தன. வெளிநாட்டு பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

2016, பிப்ரவரி 27-ம் தேதி அன்று 20 வயது இளைஞனை சுட்டுக்கொன்றது துணை ராணுவம். லாடா சிகாகா தலைமையிலான பழங்குடியினர் குழு ஒன்று இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூறி ஆளுநருக்கு அவசர மாக தந்தி அனுப்பியது. 2016, மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய அரசியலைமைப்பின் 73-வது சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் கிராம சபையின் தீர்மானமே இறுதியான முடிவு என்று சொன்ன நீதிபதிகள், மலையில் பாக்சைட் வெட்டுவது உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்தை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மாநில அரசை கண்டித்த நீதிமன்றம் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதி யளிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டது.

சரி, இதுபோன்ற சட்டப் போராட்டங் கள் நெடுவாசலுக்கும் பொருந்துமா?

பொருந்தும் என்கிறார் நியாமகிரி வழக்குகளை முன்னெடுத்தவர்களில் ஒருவரான சத்திய நாராயண பட்நாயக். காந்தியவாதியான இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காந்தி யம் படிப்பை படித்தவர். “பழங் குடிகளும் விவசாயிகளும்தான் நாட்டின் மூத்த குடிமக்கள். பழங்குடியி னர்கள் இல்லை எனில் காடுகளும் நீர்நிலைகளும் என்றோ அழிந்து போயிருக்கும். பழங்குடிகளுக்கு வனங்களில் இருக்கும் உரிமையைப் போன்றதே விவசாயிகளுக்கு அவர் களின் நிலங்களில் இருக்கும் உரிமை. எனவே, நெடுவாசல் கிராமம் மட்டுமின்றி காவிரி டெல்டாவில் இருக்கும் அத்தனை கிராமப் பஞ்சாயத் துக்களும் தங்களது கிராம சபைக் கூட்டங்களைக் கூட்டி திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அவரவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். கூடுதலாக நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர வேண்டும். நியாமகிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் முன்னுதாரணமாக இணைத்து மனுத் தாக்கல் செய்யலாம்.” என்கிறார்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x