Published : 08 Jun 2016 11:08 AM
Last Updated : 08 Jun 2016 11:08 AM
நாகரிக வளர்ச்சியாலும், தொலைக்காட்சி உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களின் வரவாலும் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது ஆதிக் கலையான பொம்மலாட்டம்.
நம் நாட்டின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதால் இது ஆதிக்கலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கலை குறித்து திருக்குறளில் "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று" என திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். "இரப்பவர் இல்லையானால் இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்" என்பது இதன் பொருள்.
"ஆட்டுவித்தால் ஆடுகிறேன்" என்று அப்பரும், "கூத்திரப் பாவை நிலையற்று விழும்முன் சூட்சம் கயிற்றைப் பாரடா" என குணங்குடி மஸ்தான்சாகிப்பும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் பாரம்பரிய கலையான பொம்மலாட்டக் கலையின் தொன்மையை நம்மால் அறிய முடியும்.
தொடக்கத்தில் பொழுதுபோக்குக் கலை யாக மட்டுமே இருந்து வந்த பொம்மலாட்டம் பின்னர் சமுதாய மாற்றத்துக்கான விதைகளை விதைப்பதில் முக்கியப் பங்கு வகித்து வந்தது. இக்கலை மூலம் பல்வேறு சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
ஆதிக் கலையான பொம்மலாட்டத்தில் இருந்து கூத்துக்கலை, நாடகக்கலை தோன்றின. பின்னர் அது திரைத்துறையாகவும் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் நாகரிக வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்களால் தொலைக்காட்சி போன்ற தகவல் ஒளிபரப்பு சாதனங்களால் ஆதிக்கலையான பொம்மலாட்டம் தற்போது அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாததால் இக்கலையை நம்பியுள்ள கலைஞர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து பொம்மலாட்டம் நடத்தி வரும் எம்.சோமசுந்தரம் கூறியதாவது:
மர பொம்மலாட்டக் கலை இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. மன்னர்கள் காலத் தில் அந்தப்புரத்தில் ராணிகளின் பொழுது போக்குக்காக தோன்றியது பொம்மலாட்டம். அந்தபுரத்திற்குள் ஆண்கள் செல்ல முடியாது என்பதாலும், கலைஞரின் முகம் மட்டுமின்றி உடல் பாகம் எதுவும் வெளியில் தெரியாது என்பதாலும் அங்கு பொம்மலாட்டம் நடத்தப்பட்டது.
தொடக்கக் காலத்தில் ராமாயணம், வள்ளி திருமணம் போன்ற கதைகள் நடத்தப்பட்டன. இதற்காக அக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்களை மரத்தால் பொம்மையாக செய்து நடனமாடிக் கொண்டு பேசுவதற்கு ஏற்றார்போல் அவை வடிவமைக்கப்பட்டன.
அதன் பின்னர், கோயில் திருவிழாக்களி லும் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதனால் இக்கலையை நம்பி யுள்ள கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கிடைத்தது. தற்போது கோயில் திருவிழாக்களில் பாட்டுக் கச்சேரி, இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதால் பொம்மலாட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஓரிரு கோயில் திருவிழாக்களில் மட்டுமே பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி நடத்த 8 முதல் 12 கலைஞர்கள் ஈடுபட வேண்டும். ஆனால், தொழில் நசிந்து விட்டதாலும், போதிய வருமானம் இல்லாத தாலும் கலைஞர்கள் பலர் மாற்றுத் தொழிலுக்குச் சென்று விட்டனர்.
எனவே, அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை விளக்கவும், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, கல்வி விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பெண் சிசுக் கொலைக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவற்றை பொம்ம லாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இசைப் பள்ளியில் பொம்மலாட்டக் கலையையும் பாடமாக்க வேண்டும்.
மேலும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின்போது பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டால் ஆதிக் கலையான பொம்ம லாட்டக் கலைக்கும், கலைஞர்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT