Published : 19 Jan 2017 05:54 PM
Last Updated : 19 Jan 2017 05:54 PM
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012-ல் திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டு நெருங்கியுள்ளது. இதுவரை குற்றவாளிகள் ஒருவரை கூட போலீஸார் கைது செய்யவில்லை. இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் செய்த மனுத் தாக்கல் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.கோகுல்தாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸாரின் 11-வது விசாரணை அறிக்கையை அரசு வழக்கறிஞர் பிரபா தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, 'ராமஜெயம் கொலை குற்றவாளிகளை போலீஸார் நெருங்கியுள்ளனர். விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் ரவி வாதிடும்போது, 'இந்த மனு இதுவரை 17 முறை விசாரணைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், கண்டுபிடித்துவிடுவோம், கைது செய்துவிடுவோம் என கூறி அவகாசம் வாங்கி வருகின்றனர். ஆனால் உண்மையில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியாக திசையில் செல்லவில்லை. எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்' என்றார்.
இதையடுத்து ராமஜெயம் கொலையில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸார் என்ன முறைகள் கையாள்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை பார்க்கும் போது ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களில் யார் குற்றவாளிகள் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது சிபிஐ வழக்கறிஞர் ஜெயக்குமார் வாதிடும்போது, 'ஒரு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிஐ தனி முறையை கையாள்வது இல்லை. ஒருவர் மீது ஏற்படும் சந்தேகம், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் முடிவு செய்யப்படுகின்றனர்' என்றார்.
பின்னர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. இது சிபிசிஐடி போலீஸாருக்கு வழங்கப்படும் இறுதி கெடு. இந்த கெடுவுக்குள் குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT