Last Updated : 13 Aug, 2016 10:01 AM

 

Published : 13 Aug 2016 10:01 AM
Last Updated : 13 Aug 2016 10:01 AM

எவ்வித இசை பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் நாதஸ்வரம் தயாரித்து அசத்தும் போக்குவரத்து காவலர்

எந்த இசைப் பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் நாதஸ்வரம் தயாரிக் கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் விருதுநகரில் போக்குவரத்து காவலராக பணி யாற்றும் காளிராஜ். தற்போது பல கலைஞர்கள் இவரிடம் நாதஸ்வரம் வாங்கிச் செல்கின்றனர்.

நாதஸ்வரத்தில் இரண்டு கட்டை, இரண்டரைக் கட்டை, மூன்று கட்டை, ஐந்து கட்டை என பல வகை உண்டு. ஆனால், தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுவது இரண்டரைக் கட்டை நாதஸ்வரமே. இது மத்தியஸ்த நாதஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது நாதஸ்வரம் தயாரிப்பதில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கன்பேட்டை புகழ்பெற்று விளங்குகிறது. பலர் பல தலை முறைகளாக நாதஸ்வரம் தயா ரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். ஆனால், எவ்வித இசைப் பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் நாதஸ்வரம் தயாரித்து வருகிறார் விருதுநகர் போக்குவரத்துக் காவலர் காளி ராஜ். விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளம் இவரது சொந்த ஊர்.

இதுகுறித்து, காவலர் காளிராஜ் கூறியதாவது: எனது தாத்தாவும், அப்பாவும் தச்சுத் தொழில் செய்து வந்ததால் எனக்கும் அதில் ஆர் வம் ஏற்பட்டது. விருதுநகர் ஐ.டி.ஐ.யில் தச்சுப் பயிற்சி பிரிவில் படித்தேன். அதில், 1999-ல் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றேன். அதன்பின், வீட்டில் அப்பாவுடன் சேர்ந்து தச்சு வேலையில் ஈடுபட்டு வந்தேன்.

முதல் முயற்சி

அப்போது, ஊர்வலத்தில் நாதஸ்வரம் வாசித்துச் செல்வதைப் பார்த்து நாம் ஏன் நாதஸ்வரம் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்பாவுடன் சேர்ந்து நாதஸ்வரம் செய்ய முயன்றேன். ஆனால், அதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லாததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

பின்னர், 2002-ல் காவலராக பணியில் சேர்ந்தேன். இந்நிலை யில், 2014-ல் விருதுநகர் போக்கு வரத்துப் பிரிவில் சேர்ந்த பின்னர், மீண்டும் நாதஸ்வரம் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. நாதஸ்வர கலைஞர்களுடன் பழகி, அது தொடர்பான நுணுக்கங்களை அறிந்துகொண்டேன்.

நாதஸ்வரம் ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. அதன் வாய் பகுதி மலைவாகையில் செய்யப்படு கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் காய்ந்த ஆச்சா மரத்தில்தான் அடர்த்தி அதிகம்.

அதுபோன்ற மரத்தில்தான் நாதஸ்வரம் செய்ய முடியும் என்பதால், பழைய மரக்கடைகளில் தேடி ஆச்சா மரத்தை வாங்கினேன். மாதிரிக்காக ஒரு நாதஸ்வரத்தையும் வாங்கினேன். நாதஸ்வரம் செய்ய நடுவில் சரியாக துளையிட வேண்டும். அப்போது, மனதும், உடலும் ஒருங்கிணைந்த நிலையில் இருக்க வேண்டும். அதற்காக மூச்சுப் பயிற்சி கற்றுக்கொண்டேன்.

விடாமுயற்சியால் வெற்றி

தினமும் இரவு 3 மணி வரை நாதஸ்வரம் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு, பல மாதங்களுக்குப் பிறகு முழு வடிவத்தையும் சிறப்பாக செய்து முடித்தேன். நாதஸ்வரத்தில் வாய் பகுதியில் சந்திரன் கலை, சூரியன் கலை, இடைப்பட்ட பகுதி ஈரேழு உலகம் என்பதைக் குறிக்கும். அதைத் தொடர்ந்து உள்ள 8 பட்டைகளும் எட்டுத்திக்கு பாலகர்களைக் குறிக் கும்.

ஜீவ ஸ்வரங்கள்

இவர்கள் விடும் மூச்சுக்காற்று சப்த கன்னிமார்கள் (சப்த ஸ்வரங் களாக) வழியாக பிரம்ம ஸ்வரம், பக்கவாட்டில் உள்ள ஜீவ ஸ்வரங் கள் வழியாக வாய் பகுதியில் நாத ஒலி வெளியேறும்.

நான் தயாரித்த நாதஸ்வரத்தை பல வித்வான்கள் வாசித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். புதிதாக வாங்கும் நாதஸ்வரத்தை வாசித்துப் பழக்கப்படுத்த சுமார் 6 மாதங்கள் ஆகும். ஆனால், இது பழக்கப்பட்ட நாதஸ்வரத்தைப் போல் உள்ளதாகக் கூறினர்.

தற்போது பல கலைஞர்கள் என்னிடம் நாதஸ்வரம் வாங்க வருகின்றனர். நான் தயாரிக்கும் நாதஸ்வரத்துக்கு தனி அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக எட்டுத்திக்கு பாலகர்களை ஒருங் கிணைக்கும் வகையில் ஒரு வளையம் அமைத்துள்ளேன். கே.கே.எம். நாதஸ்வரம் என்ற பெயரில் நாதஸ்வரத்தை தயாரித்து வருகிறேன். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x