Published : 02 Apr 2014 07:29 PM
Last Updated : 02 Apr 2014 07:29 PM

தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோ: விருதுநகர் பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்

"தமிழர்களுக்காக டெல்லி சென்று குரல் கொடுப்பவர் வைகோ" என்று அவருக்காக விருதுநகரில் வாக்கு சேகரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டினார்.

விருதுநகர் தொகுதியின் சிவகாசியில், மதிமுக பொதுச் செயலர் வைகோவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:

"அதிமுக, திமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து உங்களுக்கு கிடைத்தது என்ன? எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க, நரேந்திர மோடியை பிரதமராக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

முதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வி ஃபார் விஜயகாந்த், வி ஃபார் வைகோ, வி ஃபார் வைகோ... நீங்கள் வாக்களித்து வைகோவை மட்டும் அல்ல; நம் அணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தியை பெயர் சொல்லி அழைத்தவர் வைகோ. நாடாளுமன்றத்தையே கதிகலங்க வைத்தவரை, நீங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழர் நலனுக்காக வைகோ குரல் கொடுப்பார்.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றுபவர் ஜெயலலிதா. நம்பி நம்பி ஏமாந்தவர் வைகோ. அவரை நீங்கள் கைவிடக் கூடாது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசக் கூடியவர் வைகோ. நான் போகிறேனோ இல்லையோ, வைகோ டெல்லி சென்று நமக்காக பேசுவார்.

நாற்பது தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம் மோடி பிரதமராவது உறுதி. விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றி பெற பம்பரச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

பம்பரம் சுத்த சுத்த தாமரை மலரும், முரசு கொட்ட கொட்ட தாமரை மலரும். வைகோ மிகப் பெரிய பேச்சாளர். அவர் முன்பு எனக்கு பேச்சு வரவில்லை என்பதால் சீக்கிரமே உரையை முடித்துக்கொள்கிறேன்" என்றார் விஜயகாந்த்.

"உங்களது வேட்பாளரின் பெயர் என்ன?" என்று விஜயகாந்த் மீண்டும் மீண்டும் கேட்க, தொண்டர்கள் "வைகோ" என்று பதிலளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x