Published : 02 Oct 2014 10:23 AM
Last Updated : 02 Oct 2014 10:23 AM

1933, 1934-ல் பாகனேரி கிராமத்துக்கு இருமுறை விஜயம் செய்த காந்தி: காலச்சுவடாக பராமரிக்கப்படும் வீடு

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் காந்தி இரண்டுமுறை விஜயம் செய்து தங்கிய வீட்டையும், அவர் பயன்படுத்திய கழிப்பறையையும் காலச்சுவடாகக் கருதி பராமரித்து வருகின்றனர்.

பாகனேரியைச் சேர்ந்தவர் ஆர்.வி. சுவாமிநாதன். விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தனது 19-வது வயதிலேயே நிதி திரட்டுவதற்காக பாகனேரிக்கு காந்தியை வரவழைத்தவர்.

இவரது அன்பான அழைப்பின்பேரில் 1933, 1934-ம் ஆண்டுகளில் இரண்டுமுறை இக்கிராமத்துக்கு வந்து காந்தி தங்கியுள்ளார்.

மக்கள் அறவழியில் போராட்டம் நடத்த அறிவுரைகளை வழங்கி உள்ளார். அப்போது காந்தியிடம் ஆர்.வி. சுவாமிநாதன் ரூ. 4,500 நிதி வழங்கினார்.

அந்த நிதியை காந்தி, சுதந்திர போராட்டத்துக்கு பயன்படுத்தாமல் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு சமுதாயக் கிணறு அமைக்க வழங்கினார்.

அவரது விருப்பத்தின்படி சமுதாயக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

பாகனேரியில் தங்கிய காந்தி பயன்படுத்துவதற்கு அப்போதே கழிப்பறை வசதியும் ஏற்படுத்தியுள்ளனர்.

காந்தி தங்கிய வீடு என்பதால், தற்போதும் அந்த வீட்டை மராமத்து செய்து பாதுகாத்து வருகின்றனர். மேலும் காந்தி பயன்படுத்திய கழிப்பறையையும் காலச்சுவடாக கருதி பராமரித்து வருகின்றனர்.

காந்தியின் கொள்கையைப் பின்பற்றிய ஆர்.வி. சுவாமிநாதன், அதன்பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், இருமுறை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இரண்டு முறை எம்பியாகவும், நான்கு முறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தி விஜயம் செய்து தங்கிய வீட்டை ஆர்.வி.சுவாமிநாதனின் சகோதரர் வைரவனின் மகன்களான ராஜேந்திரன், ராஜா வெள்ளையப்பன் ஆகியோர் பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜா வெள்ளையப்பன் கூறும்போது, காந்தி தங்கிய வீட்டுக்கு ‘கமலவிலாஸ்’ என பெயரிட்டு ள்ளோம். அவர் பயன்படுத்திய கழிப்பறையை, அவரது நினைவாக காலச்சுவடாகக் கருதி பாதுகாக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x