Published : 25 Jan 2017 11:47 AM
Last Updated : 25 Jan 2017 11:47 AM
தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மாணவர்களின் முக்கிய கோரிக்கை, ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்’ என்பதே.
ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிராக கடந்த 11 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற மதுரை மண்ணில் தான் முதல் முறையாக தடை விதிக்கப்பட்டது கொடுமையானது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு மீதான தடையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை காரணமாக அமைந்தது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் கடலாடியில் கோயில் திருவிழாவில் ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கை விசாரித்து தனி நீதிபதி ஆர்.பானுமதி (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து 29.3.2006-ல் உத்தரவிட்டார்.
இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்குகளில் முதல் முறையாக பிராணிகள் நல வாரியம் தன்னையும் சேர்த்துக் கொண்டது. அலங்காநல்லூரில் 2004-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்வையாளர்கள் காலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் மாரிமுத்து காளை முட்டி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது தந்தை நாகராஜன் ஜல்லிக்கட்டுக்கு தடையும், இழப்பீடு கோரியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பிராணிகள் வாரியம் தாமாக முன்வந்து ஆதரவு அளித்தது.
மேல்முறையீடு உட்பட அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் எலிப்தர்மாராவ், பிபிஎஸ் ஜனார்த்தனராஜா அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நீதிபதி பானுமதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, மாடுகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. மேலும் உயிரிழந்த மாரிமுத்துவின் தந்தைக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தர விட்டனர். இவ்வழக்கு 9.3.2007-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பானுமதியின் தடை உத்தரவை அடியோடு ரத்து செய்து, அறுவடை காலங்களில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக் கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை நடத்தப்பட்டன.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பிராணிகள் நல வாரியம் கொண்டு சென்றது. இந்த வழக்கை 2007 ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 12.1.2008-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பித்த 3 நாட்களுக்கு பிறகு தமிழக அரசின் சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்று, பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக 2011-ல் பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இவ்வாறு ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் 7.5.2014-ல் அதற்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. இந்த உத்தரவால் 2015-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் நோக்கத்தில் 7.1.2016-ல் காட்சிப்படுத்தப்படும் பிராணிகள் பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிரந்தர தடையை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு 2016 நவம்பரில் தள்ளுபடியானது. தற்போது பிரதான மனு மீதான தீர்ப்பு மட்டும் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு ஜன.21-ம் தேதி நிறைவேற்றியது. இந்த அவசர சட்டம் ஜன.23-ம் தேதி பேரவையில் விவாதிக்கப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டது.
கடும் போராட்டத்துக்கு பின்பு நிறைவேற்ற ப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக யாரும் நீதிமன்றம் சென்றுவிடக்கூடாது, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் தற்போதைய விருப்பமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT