Last Updated : 08 Sep, 2016 12:53 PM

 

Published : 08 Sep 2016 12:53 PM
Last Updated : 08 Sep 2016 12:53 PM

நெல்லை: சப்பர பவனியின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் உவரியில் மாதா கோயில் சப்பர பவனியின்போது மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.

உவரி மாதா கோயிலில் ஆண்டுதோறும் சப்பர பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாதா கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்த நிலையில் 9-வது நாளான இன்று இவ்விபத்து நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உவரி போலீஸ் தரப்பில், "வியாழக்கிழமை அதிகாலை 9.30 மணியளவில் சப்பர பவனி திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சப்பரம் புறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். சப்பர பவனி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் சப்பரத்தின் மேல் பகுதி உரசியது. இதில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது. சப்பரத்தை தாங்கிச் சென்ற ராஜா (29) கிளைவ் (28), நீமோ (18) மற்றுமொரு ராஜா (31) உட்பட் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

சப்பரத்தைச் சுற்றி நின்றிருந்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர். இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் விபத்து செய்தியறிந்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். சம்பவ இடத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.

சோகத்தில் ஆழ்ந்த கிராமம்:

சப்பர பவனியின்போது மின்சாரம் தாக்கியதில் 4 இளைஞர்கள் பலியான சம்பவம் உவரி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தவிர சப்பர பவனி பாதியிலேயே தடைபட்டதால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x