Published : 09 Oct 2014 10:49 AM
Last Updated : 09 Oct 2014 10:49 AM
கடுமையான சட்ட விதிகளைக் கொண்டதாக வரைவு மோட்டார் வாகனச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
நம் நாட்டில் கடந்த 2013-ல் மட்டும் மொத்தம் 4,86,476 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 4,94,893 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 1,37,572 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக உத்தரப்பிரதேசம் (16,004), தமிழ்நாடு (15,563), ஆந்திரம் (14,171), மகாராஷ்டிரம் (13,029), கர்நாடகம் (10,046) உட்பட மொத்தம் 13 மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சாலை விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, நெடுஞ்சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது. ஆனால், சாலை விபத்துகள் பெரிய அளவில் குறையவில்லை. எனவே, மோட்டார் வாகன சட்டத்தை திருத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 விதிகளில் தற்போதுள்ள நிலவரப்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி சென்றால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.1000, காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.100, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச் சென்றால் ரூ.100 முதல் ரூ.1,100 வரை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2,500 ரூ.3,000 வரை (நீதிமன்றம் உத்தரவுப்படி) என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதியதாக வரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் இந்த அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஒட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ5,000, மேலும் தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து துறையின் ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மோட்டார் வாகன புதிய சட்டம் தொடர்பான அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டத்தின் வரைவு மசோதா அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் பின்னர், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி செய்யப்படும். அதுவரையில் அச்சட்டம் தொடர்பாக எந்த முழுமையான அறிவிப்பையும் சொல்ல முடியாது” என்றனர்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி வாகனப் பதிவு, வாகனச் சோதனை, தகுதிச்சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் பறிக்கப்படும் சூழல் ஏற்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT