Published : 04 Aug 2016 07:48 AM
Last Updated : 04 Aug 2016 07:48 AM

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் குடிநீர் வாரிய பணிகள் நிறைவு: விரைவில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த குடிநீர் வாரிய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு விரைவில் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்க உள்ளது.

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் 1926-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கழிவுநீர் இறைக்கும் நிலையம் உள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெய்த பெருமழையின்போது, அந்த சாலையில் பதிக்கப்பட்டிருந்த பெரிய கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்து, அங்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மயிலாப் பூர் லஸ் சிக்னலில் இருந்து, ஒரு வழிப்பாதையான பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை, அண்ணாசாலை, சென்ட்ரல், பிராட்வே செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் விவேகானந்தா கல்லூரி, ராதாகிருஷ்ணன் சாலை உட்லன்ஸ் ஹோட்டல் வழியாக, மியூசிக் அகாடெமி வரை சென்று, அங்கிருந்து ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலையை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிக்கும் நேரம் அதிகரிப்பதாக பொதுமக்களும், மாணவர்களும் புகார் தெரிவித்து வந்தனர்.

கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய குடிநீர் வாரியம், 8 மாதங்களுக்கு பிறகு முடித்துள்ளது.

இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, திட்டமிட்டவாறு ஜூலை மாதத் துக்குள் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. அந்த சாலையில் 2 மீட்டர் விட்டம் கொண்ட கான்கிரீட்டால் ஆன புதிய ஆள் நுழைவாயில்கள், 7 இடங்களில் 6 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 120 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. சில சிறு பணி கள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதுவும் இன்றுடன் முடிந்துவிடும். மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம் என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, அங்கு தார் சாலை அமைப்பதற்கான ஆயத்த பணிகளை, சில தினங்களில் தொடங்க இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x