Published : 02 Oct 2014 09:43 AM
Last Updated : 02 Oct 2014 09:43 AM

இன்று உலக வன உயிரின வார விழா தொடக்கம் - அழியும் விலங்குகளில் புலிகள் முதலிடம்

சென்ற நூற்றாண்டில் 40,000 புலிகள் வாழ்ந்துள்ளன. தற்போது 1,750 புலிகள் மட்டுமே வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வன விலங்குகள் ஒரு நாட்டின் விலை மதிப்பற்ற செல்வம். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, டைனோசர் முதல் பல்வகை அரிய வனவிலங்குகள் காடுகளை ஆட்சி செய்து வந்துள்ளன. படிப்படியாக மனித இனம் உலகில் அதிகரித்ததால், காடுகளில் சுதந்திரமாக நடமாடிய வனவிலங்குகள், பறவை இனங்களுக்கு ஆபத்து ஏற்பட ஆரம்பித்தது.

தற்போது காடுகளில் வனவிலங்குகள் எண்ணிக்கை சத்தமே இல்லாமல் குறைந்து வருகிறது. இவற்றைத் தடுக்க ஒவ்வோர் ஆண்டும் அக். 2 முதல் 8-ம் தேதி வரை கொண்டாடப்படும் வனவிலங்குகள் வாரம் மூலம் வனத்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது.

உயிரினங்களில் 70 சதவீதம் பூச்சிகள்

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் `தி இந்து'விடம் கூறியதாவது:

’’இந்தியாவில் பல்வகை வனங்கள், உயிரினங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. மொத்த காடுகளின் பரப்பு 6 லட்சம் ச.கி.மீ. ஆகும். இது உலக அளவில் 7 சதவீதம். இந்தக் காடுகளில் 372 வகை பாலூட்டிகள், 1,330 வகை பறவைகள், 399 வகை ஊர்வன, 181 நீர், நில வாழ்வன, 1,693 வகை மீன்கள், 60,000 வகை பூச்சிகள் வசிக்கின்றன. உலகில் வசிக்கும் உயிரினங்களில் 70 சதவீதம் பூச்சிகளாகும். பூமியில் உள்ள அத்தனை மனிதர்களையும், அத்தனை பூச்சிகளையும் தனித்தனியே எடை போட்டால், மனிதர்களின் எடையைக் காட்டிலும் பூச்சிகளின் எடை 12 மடங்கு அதிகமாகும்.

முடிவுக்கு வந்த வனவிலங்குகள் வாழ்வு

ஒரு காலத்தில் வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியாவில் தற்போது பல வனவிலங்குகள் காணாமலே போய்விட்டன. சில விலங்குகளை அரிதாகத்தான் காடுகளில் பார்க்க முடிகிறது. தற்போது எண்ணிக்கையில் அதிகம் குறைந்துவரும் விலங்குகளில் புலிகள்தான் முதலிடத்தில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் நாட்டில் 40 ஆயிரம் புலிகள் இருந்துள்ளன. தற்போது ஏறக்குறைய 1,750 புலிகளே தப்பித்தோம், பிழைத்தோம் என வாழ்கின்றன. இமயமலையில் வாழும் பனிச்சிறுத்தை, இந்திய ஓநாய், வரிக்கழுதை, புலி, காட்டுக்கழுதை, இரலை மாடு, பெரிய வரகுக்கோழி, பொன் கழுகு, செந்தலை, வாத்து ஆகியவற்றின் வாழ்வும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டன என்றார்.

அழிந்துபோன 94 வகை பறவைகள்

கடந்த 4 நூற்றாண்டுகளில் 36 வகையான பாலூட்டிகள் அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மட்டும் 300 வகை பறவைகள் அழிக்கப்பட்டு விட்டன. அதேகாலத்தில் 94 வகை பறவைகளும் அழிந்துவிட்டன. வனவிலங்குகள் காப்பாற்றப்பட வேண்டும் என அறிந்தவர்கள் 100 பேருக்கு 2 பேர் மட்டுமே. இது வருத்தம் தரக்கூடிய விஷயமாகும். வனவிலங்குகளை பாதுகாக்க காப்புக் காடுகள் வன உயிரின சரணாலயங்களாகவும், தேசிய பூங்காக்களாகவும் மற்றும் புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்படுகிறது.

காடுகள் அழிந்துவிட்டால் மனிதர்கள் வாழ முடியாது. பெருகிவரும் மக்கள் தொகை, கால்நடைகளை வேட்டையாடுதல் மற்றும் சுற்றுலாவும் ஒருவகையில் வனவிலங்குகள் அழிவுக்கு காரணமாகும். வனவிலங்குகள் அதிகமாக வாழும் வனப்பகுதிகளில் சுற்றுலாவை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது’’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x