Published : 10 Oct 2014 09:30 AM
Last Updated : 10 Oct 2014 09:30 AM
நாட்டின் மிக முக்கிய பகுதியான கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், விடுமுறையின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாக செய்தி வெளியாகியுள்ளது. வீரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க, அவர்களுக்கு யோகா உள்ளிட்ட மனவள பயிற்சிகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்பாக்கம் பகுதியின் கிராமவாசிகள் கூறியதாவது:
‘அணுமின் நிலைய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கென தனி பொழுதுபோக்கு அம்சங் கள், குடும்பத்தினருடன் வசிப்பதற் கான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்படவில்லை. விடுமுறை நாட்களிலும் வீரர்கள் அறையி லேயே முடங்கி இருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எப்போதும் தீவிரமாக பணி செய்யும் வீரர்கள், அனை வரையும் சந்தேகத்துடனேயே கண்காணிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மனஉளைச்சல் மற்றும் மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக் கும் வகையில், யோகா போன்ற மனவள பயிற்சி அளிக்க அணுமின் நிலைய நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வீரர்களே எதிர் பார்க்கும் நிலை உள்ளது. அணு மின் நிலையம் அருகே, மன அழுத்தம் காரணமாக, பாதுகாப்பு வீரர் ஒருவர் சுட்டதில் சக வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொது மக்களையோ அல்லது மற்ற பகுதியையோ சுட்டிருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதங் கள் ஏற்பட்டிருக்கும். எனவே, வீரர்களின் மனநலத்தை காப்ப தற்கு அரசு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
போலீஸ் வட்டாரங்கள் கருத்து
இது குறித்து, போலீஸ் வட்டாரங் கள் கூறியதாவது: ‘போலீஸாருக்கு, காவல்துறை சார்பில் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. மிக முக்கிய பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, மன அழுத்தம் தொடர்பான எந்த பயிற்சியும் அளிக்கப்படாமல் இருப்பது, வேதனைக்குரியது. பெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சிவராஜ்சிங் யாதவ் என்ற வீரர் கடந்த செப்டம்பர் மாதம் மன அழுத்தம் காரணமாக பணியின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செயலை நினைவில் கொள்ள வேண்டும்.
சிஐஎஸ்எப் வீரர்களுக்கு விடுமுறை கிடைக்காததால், பணிச் சுமை மற்றும் ஓய்வின்மை காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மேலும், பதவி உயர்வு பெற்றோ, புதிதாகவோ இங்கு பணிக்கு வரும் வீரர்களை, சீனியர் வீரர்கள் தங்களது சொந்த பணிகளை செய்யுமாறு வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால் வீரர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதாக ஒரு சில வீரர்கள் குமுறுகின்றனர். சிஐஎஸ்எப் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சுட்டுக்கொன்ற கொலையாளியைத் தப்பவிடக்கூடாது: இறந்த வீரரின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி
எஸ்.ஸ்ரீனிவாசகன்
கல்பாக்கம் அணுமின் நிலையத் தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர் விஜய் பிரதாப்சிங் துப்பாக்கி யால் சுட்டதில் சக வீரர்கள் 3 பேர் இறந்தனர். இதில் சேலம் மாவட்டம் கணேசன், மதுரை மாவட்டம் சுப்புராஜ் ஆகியோரும் இறந்தனர்.
சுப்புராஜின் உடல் நேற்று காலை அவரது சொந்த கிராமமான சின்னா ரெட்டிபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராள மான பொதுமக்கள் அஞ்சலி செலுத் தினர். சிஐஎஸ்எப் வீரர்கள் மரியாதைக்குப் பின் சுப்புராஜின் மகன் தர்மராஜ் இறுதிச் சடங்குகள் செய்ய, உடல் எரியூட் டப்பட்டது. 2-வது நாளாக இந்த கிராமம் சோகத்திலிருந்து இன்னும் மீளாமல் இருந்தது.
துப்பாக்கியுடன் எப்படி அனுமதித்தனர்?
சுப்புராஜின் மனைவி லலிதா, மகன் தர்மராஜ் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது: சம்பவ நாளில் காலை 5 மணிக்குத்தான் வீட்டிலி ருந்து பணிக்குச் சென்றார். சிறிது நேரத்திலேயே அவர் சுடப்பட்டு விட்டார். இச்சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்றே இன்னும் முழுமையாக தெரியவில்லை. கணவரின் உடலைக்கூட பார்க்க மதியம் வரை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே மனஉளைச்சலில் இருந்ததால் விஜய் பிரதாப்சிங் சுட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் மனநோயாளிபோல் இருந் ததாகவும் கூறுகின்றனர். அப்படிப் பட்டவரை எப்படி துப்பாக்கி யுடன் பணியில் ஈடுபட அனுமதித்தனர்.
எந்தத் தவறும் செய்யாத அப்பாவி வீரரை இழந்து குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. 3 பேரை கொலை செய்த வீரர் மீது சட்டப்பட்டி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனக்குழப்பம் எனக்கூறி அவரை தப்ப வைக்க வாய்ப்பளித்து விடக்கூடாது. சட்டத்தின் முன் அவர் நிறுத்தப் பட்டு உரிய தண்டனை பெற்றுத் தருவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன ஆறுதல் இருக்கப் போகிறது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில் சுட்டுக் கொல்லப் பட்ட வீரருக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT