Last Updated : 07 Nov, 2013 08:57 PM

 

Published : 07 Nov 2013 08:57 PM
Last Updated : 07 Nov 2013 08:57 PM

வடிவேலு நிலையால் சினிமா நட்சத்திரங்கள் கிலி- களைகட்டுமா ஏற்காடு இடைத்தேர்தல்?











ஏற்காடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய சினிமா நட்சத்திரங்கள் வருவார்களா என்று மலைக்கிராம மக்கள் நேரில் பார்க்கும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம், நடிகர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக தி.மு.க. தரப்புக்கு பிரச்சாரம் செய்ய நடிகர்கள் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



கடந்த ஜூலை மாதம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் இறந்ததையடுத்து, வரும் டிச. 4-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், திமுக சார்பில் மாறனும் களத்தில் உள்ளனர். பிற முக்கியக் கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் போட்டியிடுவதைத் தவிர்த்து, ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கின்றன.

எனவே, பிரதானக் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தங்களது பலத்தை நிரூபிக்க, அதிரடி பிரச்சார வியூகத்தை வகுத்துள்ளன. ஆளுங்கட்சி தேர்தல் பணிக்குழுவில் 31 அமைச்சர்கள் உள்பட மொத்தம் 62 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தி.மு.க.விலும் முக்கியப் பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்று, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினர், சாக்கடைப் பிரச்சினை முதல் அனைத்துப் பிரச்சினைகளையும் புகாராகத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்கள் களமிறக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்காடு தொகுதி வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, சினிமா நட்சத்திரங்கள் ஊர் ஊராக வந்தாலும், முக்கியமான சில இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றுவிடுவர். ஆனால், இடைத்தேர்தலின்போது வீதி வீதியாக சினிமா நட்சத்திரங்கள் வலம் வருவார்கள் என்பதால், பெரும்பாலான மக்கள் அவர்களைப் பார்த்து ரசித்து, வாக்குகளை அள்ளி வீசுவர் என்ற நம்பிக்கை அரசியல் கட்சியினரிடையே உள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில், பெரிய வெற்றி பெற நினைக்கும் ஆளுங்கட்சி, சினிமா நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை பலரையும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகர்கள் ராமராஜன், ஆனந்த்ராஜ், சரவணன், தியாகு, ராதாரவி, உதயகுமார், சிங்கமுத்து உள்ளிட்டோரையும், நடிகைகள் சரஸ்வதி, பாத்திமாபாபு உள்ளிட்டோரையும் அழைத்து வரத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதேபோல், திமுக தரப்பில், நடிகை குஷ்பு, நெப்போலியன், சந்திரசேகர், குமரிமுத்து உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவுக்கு வந்த வினை! கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கிய நடிகர்களில் வடிவேலு முக்கியப் பங்கு வகித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எதிர்த்து அரசியல் களத்தில் புகுந்த வடிவேலு, அதிமுக தலைமை பற்றி விமர்சனம் செய்யவில்லை. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல், ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசத்தால் நடிக்கும் வாய்ப்பு, பணம், புகழ் உள்ளிட்டவைகள் மங்கத் தொடங்கின.

ஏற்காடு இடைத்தேர்தலில் புதிய சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க திமுக திட்டமிட்டாலும், விருப்பத்துடன் முன்வர யாரும் தயாராக இல்லாத நிலையே உள்ளது. நடிகர் வடிவேலுவைப் போன்று, எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தால், திமுக தரப்பில் பிரச்சாரம் செய்ய சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x