Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்காலில் அண்மையில் நடந்த விழாவில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மீது முதல்வர் பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். புதுவை அரசு செயல்பாட்டில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாறுபட்ட கருத்துண்டு.அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பாட்டை முடக்கும் ஆளுநரின் அதிகார வரம்பு மீறலை அனுமதிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு பிரச்சினையிலும் துணை நிலை ஆளுநர் தன்னிச் சையாக, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமாக செயல்பட்டதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது.
துணைநிலை ஆளுநர் தனது மருமகள் மீராவை, ஆளுநருக்கான சிறப்பு தனி அதிகாரியாக நியமித்துள்ளதாகத் தெரிகிறது. ஊதியம் இல்லாத பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகையைத் தாண்டி அரசுத் துறைகளிலும் அதிகாரம் செலுத்தும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன என்பது ஆளுநருக்கே வெளிச்சம். இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தவறான முன்னுதாரணமாகும்.
முந்தைய ஆளுநர் இக்பால் சிங், பஞ்சாப் மின்வாரியத்தில் முதுநிலை செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தனது உறவினரான ஜே.பி.சிங்கை சிறப்பு தனிஅதிகாரியாக நியமித்திருந்தார். இந்த நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு ரத்துசெய்தது. ஆனால், ஜன நாயகம், மாநில அரசின் உரிமை குறித்து கவலைப்படுகிற காங்கிரஸ், மாநில ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து மௌனம் சாதிப்பது கவலையளிப்பதாகும்.
மாநில துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவின் அதிகார அத்துமீறல்களை மத்திய உள்து றை அமைச்சகம் உரிய தலையீடு செய்து சரிசெய்ய வேண்டும். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என வெ.பெருமாள் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT