Last Updated : 14 Jun, 2016 11:35 AM

 

Published : 14 Jun 2016 11:35 AM
Last Updated : 14 Jun 2016 11:35 AM

ஜிம்னாஸ்டிக் பயிற்சி தரும் சினிமா கலைஞர்: இளம் வீரர்களை உருவாக்க தீவிர முயற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் ஜிம்னாஸ்டிக் வீரர்களை உருவாக்கி வருகிறார், சினிமா சண்டைக் கலைஞர்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆர்.கே.ராமன்(60). ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்ற இவர், சினிமா சண்டை மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் குழுவில் சண்டை கலைஞராக பணியாற்றினார்.

பள்ளிகளில் பயிற்சி

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சினிமாத் துறையில் இருந்து வெளியேறி, தூத்துக்குடி வந்த ராமன், மாணவ, மாணவியருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதற்காக மாவட்ட ஜிம்னாஸ்டிக் விளையாட்டு கழகத்தை தொடங்கி, அதன் செயலாளராக இருந்து வருகிறார்.

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளித்து வருகிறார். ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு முத்துநகர் கடற்கரையில் சனி, ஞாயிறு தினங்களில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

3 வயது முதல்…

ஆர்.கே.ராமன் கூறியதாவது:

தூத்துக்குடியில் இதுவரை என்னிடம் சுமார் 100 மாணவ, மாணவியர் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறப்பாக பயிற்சி பெற்று என்னிடமே உதவியாளராக உள்ளனர்.

தற்போது 3 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 25 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முத்துநகர் கடற்கரையில் பயிற்சி அளித்து வருகிறேன்.

இதனைத் தவிர மாவட்டம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கிறேன். பள்ளிகளில் மட்டும் சுமார் 500 மாணவ, மாணவியர் என்னிடம் பயிற்சி பெறுகின்றனர். இதற்காக பள்ளிகள் சார்பில் மாதம்தோறும் ரூ.2000 முதல் ரூ.3000 வரை எனக்கு ஊதியமாக தருவார்கள்.

உபகரணங்கள் இல்லை

என்னிடம் பயிற்சி பெற்ற 5 பேர் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்த 6 மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை மாநில போட்டிக்கு அழைத்துச் செல்கிறோம்.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டை பொறுத்தவரை பேரலல் பார், ஹரிசாண்டல் பார், ஹை பார், ஸ்டில் ரிங், பேலன்ஸ் பீம், அன் ஈவன் பார், மேட் போன்ற பல்வேறு உபகரணங்கள் தேவை.

கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் மட்டும் இந்த உபகரணங்கள் உள்ளன. மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கான வசதிகள் இல்லை. உபகரணங்கள் இருந்தால் மாணவ, மாணவியர் தேசிய அளவிலான போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என்றார் அவர்.

ஏற்பாடு செய்யப்படும்

மாவட்ட விளையாட்டு அலுவலர் எல்.தீர்த்தோஸ் கூறும்போது, ‘ஜிம்னாஸ்டி விளையாட்டுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பார், மேட் போன்ற சில உபகரணங்கள் உள்ளன. அவற்றை சில மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பல உபகரணங்கள் அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் முறையாக பயிற்சிக்கு வந்தால், அவர்களுக்கு தனியாக ஷெட் அமைத்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். கூடுதல் உபகரணங்களை அரசிடம் கேட்டு பெறவும் வசதியாக இருக்கும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x