Published : 02 Oct 2013 11:10 AM
Last Updated : 02 Oct 2013 11:10 AM
திருத்தப்பட்ட கட்டணத்துக்கான மீட்டர்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஆட்டோக்களில் பொருத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெ.மனோகர், வடசென்னை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு நலச் சங்க பொதுச் செயலாளர் எம்.ஆனந்தன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் 74 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணத்துடன் கூடிய மீட்டர்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஆட்டோக்களில் பொருத்த வேண்டும் என்று ஆகஸ்ட் 25-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், பழைய மீட்டர்களில் புதிய கட்டணத்துக்கேற்ப மாற்றம் செய்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மீட்டர்களை உருவாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 மெக்கானிக் மையங்கள் மட்டுமே சென்னை மாநகரில் உள்ளன. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 8 ஆயிரம் ஆட்டோக்களில் மட்டுமே புதிய கட்டணத்துக்கேற்ப மீட்டர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தகைய சூழலில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் எஞ்சிய ஆட்டோக்களுக்கான மீட்டர்களை தயார் செய்வதற்கான சாத்தியம் இல்லை.
எனவே புதிய கட்டணத்துடன் கூடிய மீட்டர்களை அனைத்து ஆட்டோக்களிலும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேதிக்குள் மீட்டர்களை பொருத்தவில்லையெனில், ஆட்டோக்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, இது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இம்மாதம் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT